கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 'தமிழகம், புதுச்சேரி
உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பரவலாக மழை
பெய்யவும், சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது'
என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாடு முழுதும், தற்போது கோடைக் காலம் நிலவுகிறது. எனினும், வெப்பச்சலனம்
காரணமாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டிய, மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதி மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும், 10 நாட்களாக, விட்டு
விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம்
சிற்றாறில், 7 செ.மீ., மழை பெய்தது. மதுரை விமான நிலையம், 5; தேவகோட்டை, 4;
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, 3; வால்பாறை, 2; மதுரை தாளவாடி, 1 செ.மீ., மழை
பெய்துள்ளது.
இடி, மின்னல்
இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள்
உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
அறிவிப்பு:
வங்கக் கடல், அரபிக்கடலை உள்ளடக்கிய, இந்திய பெருங்கடல் பகுதியில்,
ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுகிறது. தமிழகம் - மத்திய பிரதேசம்; தமிழகம் -
கர்நாடகா வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம்,
புதுச்சேரியை ஒட்டிய கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு பரவலாக மழை
பெய்யும்.
கடலோர பகுதிகளில், மணிக்கு, 40 கி.மீ., வேகம் வரை சூறைக்காற்று வீசுவதுடன்,
கன மழைக்கும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன், ஆலங்கட்டி
மழையும் பெய்யும்.சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், காற்றின்
வேகம் அதிகரிக்கும்.குளிர்ந்த காற்று வீசும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.சூறாவளி
காற்றுவங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள லட்சத்தீவு
பகுதிகளில், மணிக்கு, 40 கி.மீ., முதல், 50 கி.மீ., வரை சூறாவளி காற்று
வீசும். எனவே, அந்த பகுதிகளுக்கு செல்லாமல், மீனவர்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
வெயில் நிலவரம்
மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலுார் ஆகிய மாவட்டங்களிலும்,
திருத்தணியிலும், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.எனவே,
பொதுமக்கள் பகலில் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு,
வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம்
அதிகரித்து வருகிறது.
வீடுகளில் மின் விசிறி சுழன்றாலும், வெப்பக் காற்று வீசுகிறது.இதனால்,
ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், திணறி வருகின்றனர். இந்த
சூழலில், நான்கு நாட்களாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது, மக்களிடையே, பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
மழை தொடர வாய்ப்பு 'அந்தமான் அருகே, வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த
தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது. மேற்கில் இருந்து வரும் ஈரப்பதம் மிகுந்த காற்றின்
காரணமாக, அந்தமானின் தெற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று,
வரும், 30ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்இது, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும்,
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம், தமிழகத்தை நோக்கி திரும்பினால், தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர
வாய்ப்புள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...