அரசு தேர்வுகள் இயக்ககம்,
சென்னை - 600006
ஐயா/அம்மா,
*பொருள்: மேல் நிலை பொதுத் தேர்வு - 2020 - விடைத்தாள் மதிப்பீட்டு பணி - விடைத்தாள் திருத்தும் மையம் தாலுகாவுக்கு ஒன்று அமைத்திட கோருதல் - சார்பு*
கொரோனோ ஊரடங்கு முடிவுறும் மே 3ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் அதனைத் தொடர்ந்து +1,+2 விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க இருப்பதாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அதற்குள் கொரோனோவும் ஒரு முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதி அடைய வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம்.
விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கும் முன்பே தமிழக அரசும் தேர்வுத் துறையும் கொரோனோ அபாயம் காரணமாக சில சிறப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துதர தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகிறது. *கோரிக்கைகள்:*
1.விடைத்தாள் திருத்தும் மையங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமைத்திடல் வேண்டும்.
2 ஒரு தலைமை தேர்வர் , மதிப்பெண் கூட்டுநர், 6 உதவித் தேர்வர் என அமைக்கப்படும் ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி அறைகள் அமைத்திட வேண்டும்.
3.ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைவசதி (தனித்தனி சேர், டேபிள்) ஏற்படுத்திட வேண்டும்.
4.சமூக இடைவெளியுடன் தேர்வு மையம் அமைக்கும்போது, கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அதே தேர்வு மைய எண்ணிக்கை போதாது. எனவே விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கையை கண்டிப்பாக கூட்டி ஆக வேண்டும்.
5.கடந்த ஆண்டுகளில் மாவட்டத்திற்கு இரண்டு, கல்வி மாவட்டத்திற்கு ஒன்று என இருந்த தேர்வு மையங்களை விரிவுபடுத்தி, ஆசிரியர்களின் நலன்கருதி தாலுகாவிற்கு ஒரு தேர்வு மையம் என அமைத்திடல் வேண்டும்.
6. ஆசிரியர்களின் இருப்பிடத்தைக் கணக்கில் எடுத்து அருகாமை மையத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். வேறு மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட மையங்களில் பணியாற்ற சிறப்பு அனுமதி வழங்கிட வேண்டும்.
7.முகாம் அலுவலர் பணிக்கு போதாமை ஏற்படின் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியில் மூத்த மற்றும் விருப்பத்தின் பெயரில் முகாம் அலுவலராக நியமித்தல் வேண்டும்.
8. மையங்களுக்கு கண்டிப்பாக உணவு ஏற்பாடு செய்து எடுத்து வரவேண்டி உள்ளது. வெளியே சென்று உணவு உண்ண முடியா நிலை உள்ளது. பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளனர். எனவே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் நேரம் காலை 8, 8.30 என்ற வழக்கமான நேரத்தை மாற்றி 9.30 க்கு தொடங்க வேண்டும். மாலை 4 மணியளவில் கண்டிப்பாக முடித்து விட வேண்டாம்.
9. கொரோனோ அபாயம் கருதியும், சமூக இடைவெளியைப் கணக்கில் கொண்டும் விடைத்தாள் திருத்தும் மையம் வந்து செல்ல தேர்வுத்துறையே போக்குவரத்து வசதியை காலை மாலை ஏற்பாடு செய்ய வேண்டும்.
10. எக்காரணம் கொண்டும் விடைத்தாள் எண்ணிக்கை கூட்டி தரக் கூடாது. மொழிப் பாடத்திற்கு 12 என்றும், மற்ற பாடத்திற்கு 10 என்றும் இருக்கும் விடைத்தாள் எண்ணிக்கை மாற்றக் கூடாது.
11.கூடுதல் விடைத்தாள் திருத்தும் படி நிர்பந்திக்கக் கூடாது.
12.விடைத்தாள் திருத்தும் மையம் கற்றோட்டம் உடையதாகவும், தண்ணீர் வசதி , மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான கழிப்பறை வசதி உள்ளதாகவும் அமைத்திடல் வேண்டும்.
13. ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை தினமும் சிறப்பாக செய்து தர வேண்டும்.
14. ஒவ்வொரு முகாமிலும் மருத்துவ குழு அமைத்து அனைத்து பணியாளர்களையும் தினந்தோறும் கொரானா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
15. தேர்வு மையங்களுக்கு வழங்க வேண்டிய செலவினத்தொகையை நிலுவையில் உள்ளதோடு சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும்.
16. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும் என்ற அரசு விதிகள் இருக்க, கடந்த பல ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. அதனை கணக்கில் கொண்டு உழைப்பூதியம் உள்ளிட்ட அனைத்தையும் இரட்டிப்பாக்கித் தருதல் வேண்டும்.
17 கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வுத்துறை ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பெற்றதே இல்லை. அவர்களாவே முடிவு செய்துவிட்டு ஆசிரியர் சங்கங்களை அழைத்து கருத்துக்களை திணிப்பதுதான் நடந்துள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு ஆசிரியர் சங்கங்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பயன்தரும்.
18.மேற்கண்ட சிறப்பு ஏற்பாடுகளை அரசும் தேர்வுத்துறையும் செய்து தந்து, மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளை ஆசிரியர்கள் மனநிறைவோடு, நிறைவேற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திடும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக தேர்வுத்துறையை விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
*ப.மனோகரன்*, மாநில பொதுச்செயலாளர் , *தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.*
நகல்: 1.பள்ளிக் கல்வி ஆணையர்,
2. பள்ளிக் கல்வி இயக்குனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...