02.03.2020 அன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் அரசு தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் தேர்வுகள் எழுதி அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைவரும் அவரவர் உழைப்பிற்கேற்ப நிறைவாக, முழுமையாக தேர்வு எழுதி, மிக அதிக மதிப்பெண் எடுத்து, சிறப்பான வெற்றி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
தேர்வுக்குச் செல்ல உள்ள மாணவ, மாணவியர் காலையில் தன் பெற்றோரிடம் ஆசி வாங்கி தேர்வெழுதச் செல்லுங்கள்.
உங்கள் வெற்றிக்கு உங்கள் பெற்றோர்களை விட ஆசைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவர்கள் உள்ளம் குளிர்ந்து வாழ்த்தும் வார்த்தைகள் அதீத சக்தி வாய்ந்தவை.
தேர்வு மையத்திற்கு சிறிது முன்னதாகவே புறப்பட்டுச் செல்லுங்கள்.
கடைசி நேர அலைச்சலைத் தவிருங்கள்.
ஊக்கத்தோடு மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதச் செல்லுங்கள்.
காலையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். பட்டினியாகச் செல்லாதீர்கள்.
எழுதுபொருட்கள், hall ticket, . . . போன்றவற்றை மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
தேர்வறைக்குச் செல்லும் முன்னர் நண்பர்களிடம் பாடங்கள் குறித்து விவாதிக்காதீர்கள். பதட்டமடையாதீர்கள்.
ஓராண்டு நீங்கள் கற்றதை நினைவில் இருத்திக்கொண்டு தேர்வறைக்கு பயமில்லாமல் செல்லுங்கள்.
தேர்வறைக்கு மன சஞ்சலமில்லாமல் செல்லுங்கள்.
உரிய தேர்வறைக்குச் சென்று, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருங்கள்.
உங்களுக்குப் பிடித்த தெய்வத்தையும், பெற்றோரையும் மனதில் வணங்குங்கள். அவர்கள் ஆசீர்வாதம் உங்களுக்குத் துணைபுரியும்.
தேர்வெழுதவுள்ள பாட ஆசிரியரை மனதில் நினைத்து, அவர் அறிவுரைகளை மனதில் கொண்டு, இறையருளோடு தைரியமாக தேர்வை எதிர்கொள்ளுங்கள். பாடம் குறித்து அவர் கூறியவை மனதில் விரிவடையும். எந்தெந்த வினாக்களை, எவ்வாறு எழுத வேண்டும் என அவர் அறிவுறுத்தியது மனதில் தோன்றும். மனம் அமைதிபெறும்.
அப்பாடத்தில் செய்த தவறுகளையும், செய்யத் தவறியவைகளையும், செய்ய வேண்டியவைகளையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு, கேள்வியை நன்றாக படித்துப் பார்த்து சரியான விடையை விரைவாக, தெளிவாக, அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுங்கள்.
வினாத்தாளை வாங்கிவுடன் நிதானமாக வாசியுங்கள். எல்லா வினாக்களுமே உங்களுக்கு தெரிந்தவையாகவே இருக்கும். ஓரிரண்டு அல்லது சில வினாக்கள் புதியவையாக இருக்கும். பதட்டமடையாதீர்கள். அவற்றுக்கும் தொடர்புடைய விடையை எழுத இயலும். எந்த வினாக்களையும் விடை எழுதாமல் விட்டுவிடாதீர்கள்.
உங்களுக்கு மிகவும் சரியாக விடை தெரிந்த வினாக்களைத் தேர்ந்தெடுத்து, அவ்வினாக்களுக்கு கேட்கப்பட்ட அளவில் விடையளியுங்கள்.
அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக, அழகாக விடையளியுங்கள்.
உங்கள் பெற்றோர்களின் ஆசியோடும், ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலோடும், தேர்வை மிகச் சிறப்பாக எழுதுங்கள்.
என்றும் வெற்றி உங்களுக்கே!!!!
தேர்வு முடிந்து வெளியே வந்தவுடன், அத்தேர்வு குறித்து விவாதம் செய்யாதீர்கள். அலசாதீர்கள். அவ்வாறு செய்வது தங்களின் அடுத்த தேர்வினை பாதிக்க வாய்ப்புள்ளது. தேர்வை எவ்வாறு எழுதினாலும் மன தைரியத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்.
நம்பிக்கையுடன் செல்க.
தன்னம்பிக்கையுடன் எழுதுக.
உயர்வுடன் வெல்க.
வெற்றியுடன் மீள்க.
வாழ்க வளத்துடன்.
சிவ. ரவிகுமார், தலைமையாசிரியர்.
அரசு உயர்நிலைப்பள்ளி, பாஸ்மார்பெண்டா,
வேலூர் மாவட்டம்-635810
9994453649. 6381568124
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...