கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் 7ம் வகுப்பு வரையிலான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்கூடிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.7ம் வகுப்பு வரை இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரம் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 3 வயது சிறுவன் உட்பட இதுவரை கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7ம் தேதி கேரளாவுக்கு இத்தாலியில் இருந்து வந்த குடும்பத்தில் 3 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 1,116 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதால் இதனை மாநில பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31ம் தேதி வரை சினிமா தியேட்டர்கள் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...