தமிழகத்தில் கல்வியின் தரம் 2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு
சென்றதுதான் கல்வித் துறையின் உயர்வா என்று பேரவையில் அதிமுக- திமுக இடையே
காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளி மற்றும் உயர்
கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்
கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திருக்கோவிலூர் பொன்முடி (திமுக)
பேசியதாவது: வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே
கல்வித்துறைக்கு இந்தாண்டு கூடுதலாக ரூ.5,423 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இவ்வளவு நிதி ஒதுக்கியது
வரவேற்க்கத்தக்கது என்றாலும், கல்வி துறை மாநில பட்டியலில் இருந்து பொதுப்
பட்டியலுக்கு சென்ற நிலையில், இப்போது மத்திய அரசின் பட்டியலுக்கு
சென்றுவிடும் அச்சம் எழுந்துள்ளது.
2018 ஜூலை 17ம்தேதி அன்று மத்திய கல்வி அமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடும் போது, மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் கல்லூரிகள் தொடங்க ரூ.1700 கோடி ஒதுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
இங்கு கல்லூரிகள் அமைக்க தமிழக அரசுக்குதான் உரிமை உள்ளது. மத்திய அரசு தொடங்குவோம் என்று கூறுவது ஆக்கிரமிக்கும் செயல். நீங்கள் பணிவோடு செல்வதால்தான் மத்திய அரசு தலையிடுகிறது. இதிலும், எப்போதும் போல் இருந்துவிடாமல் திராணி இருந்தால் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: எங்கள் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். தைரியத்தோடு, துணிச்சலோடு எங்கள் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கிறோம். பொன்முடி: 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அமைச்சர் அறிவித்தார். பின்னர் அவரே பொதுத் தேர்வு கிடையாது என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அன்றைய கல்வி முறைக்கும், இன்றைய கல்வி முறைக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது. நாம் படிக்கும் போதெல்லாம் பாஸ் பண்ணினால்தான் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். அப்போதுதான் மாணவனின் தரத்தை நாம் மதிப்பிட முடியும்.
தேர்வுகள் எழுதாமல் சென்றால், அந்த மாணவன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படி எதிர்கொள்வான். மாணவரின் தரம் என்ன என்பதை கண்டறிந்தால்தான் தரமான கல்வி வழங்க முடியும். நீங்கள் சொன்னதால் பொதுத் தேர்வை ரத்து செய்யவில்லை. தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தேர்வு குறித்து அவதூறு பரப்பியதால் முடிவை மாற்றிக் கொண்டோம். பொன்முடி: நாம் படிக்கும் போது இஎஸ்எஸ்எல்சியாக இருந்தது. பின்னர் அது எஸ்எஸ்எல்சியாக மாற்றப்பட்டது. தேர்வு வைப்பதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது. முதல்வர் பழனிசாமி: விஞ்ஞான உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். அதற்கு தகுந்தவாறு மாணவர்களை தயார்படுத்தினால்தான் உலகத் தரத்திலான கல்வி அவர்களுக்கு கிடைக்கும். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் போட்டி போடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ளவே கொண்டு வந்தோம்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்: நாம் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு தடையாக இல்லை. அதிமுக ஆட்சியில் 85 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திராணி இருந்தால் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று சொன்னார். மல்யுத்தத்துக்கு நாங்கள் செல்லவில்லை. ராஜதந்திரத்துடன் நமக்கு தேவையானவற்றை பெற வேண்டும். தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை எப்போதும் விட்டு கொடுக்கமாட்டோம். பொன்முடி: நீட் தேர்வை திமுக நுழையவிடவில்லை. ஆனால் நீங்கள் நுழையவிட்டீர்கள். சட்டசபையில் தீர்மானம் ேபாட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வுக்கான பாலிசி கொண்டுவரப்பட்டது. அப்போது அதை எதிர்த்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. நீட் தேர்வு என்ற வைரசை கொண்டு வந்தது நீங்கள் தான்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: நீட் பிரச்னை குறித்து பல்வேறு சமயங்களில், பல்வேறு விவாதங்கள் இதே அவையில் நடந்துள்ளது. மீண்டும் இப்போது கிளம்பி இருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தவரை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டோம் என்பது உண்மை. அமைச்சர் சொன்னது போல இருக்கலாம். நான் மறுக்கவில்லை. ஆனால் அந்தந்த மாநிலம் விரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சூழ்நிலையில்தான் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கடைசி வரையில் அதை நாம் எதிர்த்திருக்கிறோம். இதே அவையில் பல சமயங்களில் எடுத்து சொன்ன போது, எந்த காரணத்தைக் கொண்டும் நீட் தேர்வு வராது, அதைத் தடுக்கிற முயற்சியில்தான் ஈடுபடுவோம் என்று நீங்கள் பலமுறை உறுதிமொழி தந்துள்ளீர்கள். தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்துள்ளீர்கள்.
உங்களுடைய கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் எல்லாம் தெரியும். அதைப் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்பட்டு விடும். எனவே திமுகவை பொறுத்தவரை நீட்டை அன்றைக்கும் எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம், என்றைக்கும் எதிர்ப்போம், எப்போதும் எதிர்ப்போம். உங்கள் நிலை என்ன?. அமைச்சர் விஜயபாஸ்கர்: முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நீட் தேர்வை தடுத்தோம். மற்றொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்திற்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து ஜெயலலிதா விலக்கு கேட்டார். அவர் வழியில் இன்று வரை அதிமுகவும் எதிர்க்கிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஜெயலலிதா எதிர்த்தார். அவருக்கு தைரியம் உண்டு. உங்களிடம் தில் இல்லை. விட்டுவிட்டீர்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: அப்போது நாங்கள் நீட் தேர்வில் இருந்து ஒரு ஆண்டு விலக்கை கேட்டு பெற்றோம். அமைச்சர் செங்கோட்டையன்: அப்போது நீங்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தீர்கள். அப்போது எதிர்க்காமல், இப்போது எதிர்ப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. பொன்முடி: அன்று நாங்கள் எதிர்த்ததால் தான் தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. தலைவர் கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. என்ஏஎஸ் ஆய்வில், 2011-12ம் ஆண்டில் கல்வியின் தரத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருந்தது. 2016-17ம் ஆண்டில் 8வது இடத்திற்கு சென்றுவிட்டது. இது தான் தரத்தின் உயர்வா? அமைச்சர் செங்கோட்டையன்: 12 ஆண்டுகள் சமச்சீர் கல்வி என்று பழைய முறையிலேயேதான் இருந்தது. இப்போது சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்திற்கு இணையாக கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் எந்தத் தேர்வையும் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்.
பொன்முடி: அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு, தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதை காரணமாக கூறலாம். என்றாலும், அரசு பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையன்: என்ஏஎஸ் புள்ளி விவரங்களில் பல்வேறு மாநிலங்களில் வேறுபாடு இருக்கிறது. அதை வைத்து பேசுவது சரியல்ல. மக்களின் உணர்வு ஆங்கிலவழி கல்வி என்ற நிலையில் உள்ளது. அதை அரசு உணர்ந்து, எல்.கே.ஜி. ஆங்கில வழி கல்வியை தொடங்கியுள்ளது. பொன்முடி: இந்த புள்ளி விவரங்கள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. தொலை நோக்கு திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்வித்துறையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் எல்லாம் தொலைவில்தான் உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன்: ஒரே நாளில் வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பது முடியாத காரியம். படிப்படியாகத் தான் செய்ய முடியும். இந்த 8 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்ற கணக்கு வைத்திருக்கிறோம்.
பொன்முடி: பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் இல்லாத பணியாளர்களை அரசு ஊழியர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற கல்லூரிகளுக்கு அவர்களை மாற்றாமல் அங்கேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். அமைச்சர் கே.பி.அன்பழகன்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரம் பணியிடங்களுக்கு 12,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதிகமாக உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் மாற்றுப்பணி வழங்கும் நல் எண்ணத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்முடி: நான் சொல்வது ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தான். அமைச்சர் கே.பி.அன்பழகன்: அங்கு 127 பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொன்முடி: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அண்ணா பெயரையே மாற்றக்கூடிய நிலை ஏற்படும்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்: அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்படுகிறது. அண்ணா பெயரை விட்டுக் கொடுக்கும் நிலை அரசுக்கு இல்லை. பொன்முடி: சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகன்: அவர் ஏற்கனவே ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவில் இருந்திருக்கிறார். இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து மின்சார துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...