இதனால் மக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக, மாவட்டங்கள், நகரங்களின் எல்லைகளை மூடும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களை 14 நாட்கள் தனிமை மையங்களில் அடைக்கும்படியும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகளவில் 6.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 31 ஆயரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரையில் 25 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,029 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 106 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியாகி உள்ளனர்.ஊரடங்கினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களின் சொந்த ஊருக்கு, மாநிலங்களுக்கு செல்கின்றனர். மேலும், பஸ் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரே நேரத்தில் பல நூறு பேர் முண்டியடித்து பயணிக்கின்றனர். பஸ் கூரைகளின் மீதும் பயணம் செய்கின்றனர். கொரோனா பரவலின் முதல் கட்டம், 2ம் கட்டம் முடிந்து, தற்போது மிகவும் அபாயகரமான ‘சமூக பரவல்’ என்ற 3ம் கட்டத்தை நாடு சந்திக்க உள்ளது. இதில்தான், ஒரே நேரத்தில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த அபாயத்தை உணராமல், வெளி மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் சொந்த ஊர்களுக்கு கிளம்பி இருப்பது, காய்கறிகள், மீன், மட்டன் வாங்குவதற்காக கடைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிவது, பொழுது போகவில்லை என்பதற்காக பைக், கார்களில் நகர்வலம் வருவது என மக்கள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். இது, மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இதனால், நோயை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் குறிக்கோளே பயனற்றதாகி வருகிறது. எனவே, இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றவும், மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாவட்டங்கள், நகரங்களின் எல்லைகள் முழுமையாக மூடும்படி நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து சுற்றுபவர்களை 14 நாட்கள் அரசின் தனிமை மையங்களுக்கு அழைத்துச் சென்று அடைக்கும்படியும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள், டிஜிபி.க்களுடன் காணொளி மூலம் நேற்று முன்தினமும், நேற்றும் கலந்து ஆலோசித்தனர். அதன் பிறகு, இவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள் மாவட்ட, நகர எல்லைகளை மூடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளன. எல்லைப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊடரங்கை மீறி வெளியே வருபர்கள், எல்லையை கடக்க முயற்சிக்கும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்பவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களை குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமை மையங்களில் அடைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் புன்ய சாலிலா ஸ்ரீவஸ்தவா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊரடங்கை மீறுவதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் அடைக்கப்படும் மக்களுக்கான வசதிகளை அந்தந்த மாநில அரசுகள் செய்ய வேண்டும். இது பற்றிய விவரங்கள் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். மக்கள் எந்த மாவட்டம் அல்லது நகரத்தை கடக்கிறார்களோ அங்கேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்களும், எஸ்பி.க்களும் உறுதிப்படுத்த வேண்டும். ஏழைகளும், தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்களும் தங்குவதற்கான இருப்பிடம், உணவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகளே செய்து கொடுக்க வேண்டும். இதற்கான தொகையை மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு தேவையான நிதி, மாநில அரசுகளிடம் போதிய அளவில் உள்ளது.மாநில அரசின் தலைமைச் செயலர்கள், டிஜிபி.க்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர், மத்திய உள்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளதா என்றும், தேவைப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதி மூன்று வார ஊரடங்கை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மனநிலை பாதிப்புக்கு உதவி எண்கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் லாவ் அகர்வால், ‘‘ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் மனநிலையில், அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பெங்களூருவில் செயல்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் உதவியுடன் வழிகாட்டுதல் அளிக்கப்பட உள்ளது. ஏதாவது மனநிலைப் பிரச்னை இருப்பதாக உணர்பவர்கள், 08046110007 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகளைப் பெறலாம்,’’ என்று கூறினார்.வீட்டு வாடகை கேட்டு துன்புறுத்தக் கூடாதுமத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் புன்ய சாலிலா வஸ்தவா தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘‘ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது, மக்களுக்கான ஊதியம் எவ்வித பிடித்தமும் இல்லாமல் அளிக்கப்படுகிறதா? என்பதையும், இந்த கால கட்டத்தில் வாடகைக்கு குடியிருப்போரிடம் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்யவில்லை என்பதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...