டிஎன்பிஎஸ்சி கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போட்டி தேர்வுகளில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதில்
தருமாறு சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி, டிஎன்பிஎஸ்சி ஆகியோர் பதில்தர
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சரவணன்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு
மனுவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, குரூப் 2 ஏ
மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்த
நிலையில் சிபிசிஐடி பலரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறது.
அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடத்தும் இத்தகைய போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் என்பது 2012ம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது. அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளின் ஆசியுடன் நடந்துள்ள முறைகேடுகளால் தகுதியும், திறமையில்லாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நடத்திய போட்டி தேர்வுகளை எழுதியும், கடந்த 98ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வழங்க முன்னுரிமை பட்டியலில் இருந்தும் தனக்கு இதுவரை அரசு வேலை கிடைக்காமல் இத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், போக்குவரத்து கழகம், வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சக்திவேல் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு சிபிஐ, தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...