Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Wish You Happy Birthday - WhatsApp!

ஜேன் கோம். பிரையன் ஆக்டன்
. இந்த இரண்டு பெயர்கள்தான் கொண்டவர்கள்தான் ‘வாட் ஸ் அப்’ என்ற தொழில் நுட்ப புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயசு நாற்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி நாலு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸ் அப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது. விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்? குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம். பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி? ஹூம்.. சொன்னா நம்பணும் - வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே

யார் இவர்கள்?
ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்றவர்கள். பத்தொன்பது வயசான போது கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கம்யூட்டர் கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும். எந்நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாக உட்கார்ந்திருவர் ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பங்களில் கில்லாடி ஆனார். உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களின் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாட ஆரம்பித்தார்கள் (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்).

பின்னர் எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அப்போது யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு இவரை நல்ல சம்பளத்துக்கு அழைக்க, கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டு ‘யாஹூ’வில் இணைந்தார்.

இன்னொருவரான பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் ‘யாஹூ’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது

அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.
சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் சரி, பணி தாண்டிய நேரங்களிலும் சரி இரட்டையர்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். 2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியை விட்டார்கள். தென்னமெரிக்காவுக்கு பயணித்தார்கள்.

💹வாட்ஸப் பிறந்தது👀

இதுக்கிடையிலே ‘ஃபேஸ்புக்’ பிரபலமாகத் தொடங்கியது. இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், ஏனோ இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள ஃபேஸ்புக் மறுத்தது. யாஹூவில் சம்பாதித்து சேர்த்த கையிருப்பு இருவரிடமுமே கரையத் தொடங்கியிருந்தது. நொந்து போன நிலையில் ஜனவரி 2009. நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொபைல் போனில் இருந்த மெசேஜ் அப்ளிகேஷனுக்கு சில போதாமைகள் இருந்ததாக அவருக்கு பட்டது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.சுக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் செக் செய்ய பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்‌ஷன் மூலமாகவே கூடுதல் காசு செலவில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஓர் ஐடியா பளிச்சிட்டது.

ஆக்டனிடம் பேசினார். சில டெவலப்பர்களை கலந்தாலோசித்தார்கள். தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு ‘வாட்ஸ் அப்’ என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் ‘அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான இதே பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.

✳பொறுமை தந்த வெற்றி

ஆரம்பத்தில் ‘வாட்ஸ் அப்’ அடிக்கடி சொதப்பியது. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே மொபைல் போன்களில் மெசேஜ் ஆப்ஷன் இருக்க, புதுசாக இன்னொரு கந்தாயம் எதற்கு என்று நினைத்தார்கள்.“இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்” என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்த ‘வாட்ஸ் அப்’ எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இரு” என்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.

ஆக தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக அப்டேட் செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் ஏகப்பட்ட பேர் வாட்ஸ் அப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் கடலை போட ஆரம்பித்தார்கள். சட்டென்று சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.

“நாம பெருசா பண்ணலாம் பாஸ்” என்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி பிசினஸை கொஞ்சம் பெருசாக்கினார்கள். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி போன்களுக்கும் வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டன் முன்பு சொன்னமாதிரி நிஜமாகவே வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.

இன்று?

கடந்த எட்டே வருடங்களில் வாட்ஸ் அப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை மேலேயே சொல்லியிருக்கிறோம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்குக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

🎯வெற்றிக்கு காரணம்?
பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்த்துத் தொலைக்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை க்ளோஸ் செய்து, க்ளோஸ் செய்தே சோர்ந்து விடுகிறோம்.

ஆனால் வாட்ஸ் அப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய டேபிளில் பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். அது இதுதான் :
“*No* *Ads*! *No* *Games*! *No* *Gimmicks*!”

நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?

தற்போது வாட்ஸப், குழந்தையும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட விஷயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.

ஆனால்-

யாருக்கு தெரியும்? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு அப்ளிகேஷன் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி ஓட விரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும்....என்பதுதான் உண்மை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive