அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைஅணியாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, துறைத் தலைவர்களை பணியாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் இருந்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் அரசு ஊழியர்கள் இதை கடைபிடிப்பதில்லை.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது அடையாள அட்டை அணிவதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் கடிதம் எழுதினார்.
இருப்பினும், பல ஊழியர்கள் புகைப்பட அடையாள அட்டை அணியாமல் பணியாற்றுவதாக பணியாளர் நலத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அனைத்து துறை செயலர்கள், துறை அலுவலகங்களுக்கு புதிய கடிதம் ஒன்றை பணியாளர் நலத் துறை செயலர் ஸ்வர்ணா அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், ‘‘அரசு ஊழியர்கள் பணியின்போது, அரசு அறிவித்துள்ள விதிகளின்படி உருவாக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைஅணிவது கட்டாயம் என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து துறைகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். அடையாள அட்டை அணியாத பட்சத்தில், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...