திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் நூலை வெளியிட்டு பேசுகையில்,
சோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன.
சங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் சதுரம், நீண்ட சதுரம், வட்டம் போன்ற வடிவங்களில் வெளியிட்டுள்ளனர்.
பிற்காலச்சோழரில் முதலாம் ராஜராஜன் தன் ஆட்சிகாலத்தில் பல துறைகளிலும், பலவித புதுமைகளைப் புகுத்தியதுபோல் காசுகளை வழக்கில் கொண்டு வருவதிலும், பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-104) காலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178 -1218) காலம் வரை கிடைக்கின்றன. முதலாம் ராஜராஜனின் வெற்றிகளால் சோழப் பேரரசு உருவாகியது. அத்துடன் சோழர் காசுகள் பேரரசு முழுவதிலும், அப்பேரரசின் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் நாடுகளிலும் பரவின. சோழ நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளிலும் பரவின. ஆயினும் சோழ நாட்டின் பல பகுதிகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு சோழர் காசுகள் இருந்தன. தமிழகம் முழுவதும் இன்றும் அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஒரே காசு ராஜராஜனின் செப்புக்காசுகளாக உள்ளன. ராஜராஜன் வெளியிட்ட காசில் உள்ள நாகரி எழுத்துக்கள் இதே கால கட்டத்தில் வடமாநிலங்களில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றார். நாணயவியல் சேகரிப்பாளர் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையினை நூலாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அசோக்காந்தி, முகமது சுபேர், சாமிநாதன்,
கமலக்கண்ணன், மன்சூர், ராஜேஷ், இளங்கோவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக அப்துல் அஜீஸ் வரவேற்க சந்திரசேகரன் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...