Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய அறிவிப்புகள் இருக்குமா? தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்




சட்டசபை  தேர்தலுக்கு முன், அதிமுக அரசின்  கடைசி (2020-2021) முழு பட்ஜெட்டை நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற 14ம் தேதி (நாளை) அன்று காலை 10 மணிக்கு, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடும். அன்றையதினம் 2020-2021ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் நாள் குறித்துள்ளார். அதன்படி, 2020-2021ம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை 14ம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்” என்று கூறி இருந்தார்.

அரசு செயலாளர் அறிவித்தபடி, நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது.
பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.
அதன்படி 14ம் தேதி பேரவை கூட்டம் முடிந்ததும், மீண்டும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து வருகிற 24ம் தேதி முதல், மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான பேரவை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் மார்ச் மாதம் 3வது வாரம் வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடக்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் மாதம் முடிந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி மற்றும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதற்காக இப்போதே அதிமுக தயாராகி வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உள்ள 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு புதிய மற்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த தகவல் தினசரி வெளிவந்தபடி உள்ளது. பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு பொறுப்பேற்ற பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தில் திமுக வலியுறுத்த திட்டமிட்டுள்ளதால் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* 14ம் தேதி பேரவை கூட்டம் முடிந்ததும், மீண்டும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கான  கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

* அதைத்தொடர்ந்து வருகிற 24ம் தேதி முதல், மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான பேரவை  கூட்டம் நடைபெறும்.

* இந்த கூட்டம் மார்ச் மாதம் 3வது வாரம் வரை நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive