முன்பெல்லாம் பள்ளிக் கல்வித்துறையின் ஆண்டு பள்ளி வேலைநாள்களுக்கான செயல்திட்டத்தினை அந்தந்த மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தத்தம் மாவட்டத்தில் காணப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களைக் கவனத்தில் கொண்டு ஒரு கல்வியாண்டிற்குரிய பள்ளி வேலைநாள்கள் குறித்து அறிவிக்கை வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இந்த நடைமுறையினைப் பின்பற்றி, பள்ளியைச் செம்மையுடன் வழிநடத்தி வந்தனர்.
மாவட்ட அளவில் பள்ளிகள் இயங்குவதும் விடுமுறை அளிப்பதும் எந்தவொரு சிக்கலுக்கும் வழிவகுக்காமல் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டு இறுதியில் மொத்தம் வேலை செய்திருக்க வேண்டிய வேலை நாள்களை நிறைவு செய்து முடித்த கதை இன்று பழங்கதை ஆகிவிட்டது.
மேற்கூறிய நடைமுறையில் ஆசிரியப் பெருமக்கள் விடுமுறை அளிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் தத்தம் சொந்த அலுவல் வேலைகளை இலகுவாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது வங்கி மற்றும் அஞ்சலகம் பணிகள், மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடத்தப்படும் பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் முதலான ஏற்கனவே திட்டமிட்டு ஒதுக்கி வைத்த குடும்பத் தலைவர் சார்ந்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பர்.
அண்மைக் காலமாகப் பள்ளிகள் அனைத்தும் ஒற்றை அதிகார எல்லைக்குள் இயங்கத்தக்க வகையில் முன்பைவிட ஆண்டு பள்ளி வேலை நாள்கள் 220 விருந்து 210 வேலை நாள்களாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், பள்ளிகள் அனைத்தும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாளாக இயங்கிட அறிவுறுத்துவது என்பது ஏற்புடையதாக அமையாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும் போது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவித பீதியில் நாளை அதாவது எதிர்வரும் சனிக்கிழமை அன்று பள்ளிக்கு வேலைநாளா? அல்லது விடுமுறையா? என திக்திக் நொடிகளுடன் மாலை இறைவணக்கக் கூட்டம் முடிய அனைவரையும் இருக்க வைப்பது என்பது சகிப்பதற்கில்லை.
சில வேளைகளில் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்ட நடப்பு மாத நாட்காட்டியில் சுட்டப்பட்டிருக்கும் சனி விடுமுறையை மாணவர்களுக்கு அறிவித்த பின்னர் பறந்து வரும் சூடான மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டிருக்கும் சனி வேலை நாள் அறிவிப்பை ஆற்றாமையையும் வேதனையையும் மனத்தில் புதைத்துக் கொண்டு மறு அறிவிப்பு செய்வதைப் பார்த்து மாணவர்கள் தம் முக பாவனைகளில் மூலம் வெளிக்காட்டும் சலிப்பையும் எரிச்சலையும் பார்க்க முடியாது. பள்ளிப் பாடத்தில் படித்த துக்ளக் ஆட்சி அவர்களின் நினைவில் நிழலாடும் போலும்!
பல்வேறு தற்செயல் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாகக் குறைவு ஏற்பட்ட பள்ளிகள் அவற்றை ஈடுகட்டும் பொருட்டு சனிக்கிழமை அன்று வேலை நாளாகக் கொள்வது என்பது ஏற்புடையது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...