வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடம் புதிதாயினும், புரிந்துகொண்டு படிப்பவர்களுக்கு எளிமையாகவும், மதிப்பெண் குவிக்கவும் தோதான பாடமே.
வினாத்தாள் அமைப்பு
90 மதிப்பெண்களுக்கான புதிய மாதிரியிலான, பிளஸ் 1 ’வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்’ வினாத்தாள் 4 பகுதிகளைக் கொண்டது. ஒரு மதிப்பெண் பகுதி, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுவதான 20வினாக்களுடன் அமைந்துள்ளது. 2 மற்றும் 3மதிப்பெண் வினாக்கள் பகுதியானது, கொடுக்கப்பட்ட தலா 10 வினாக்களில் இருந்து தலா7-க்கு விடை அளிக்கும்படியாகவும், அவற்றுள் தலா ஒன்று கட்டாய வினாவாகவும் உள்ளது. ‘அல்லது’ வகையிலான 7 வினாக்களுடன் 5 மதிப்பெண் பகுதி அமைந்துள்ளது.
உள் வினாக்கள்
ஒரு மதிப்பெண் பகுதியின் பெரும்பாலான வினாக்கள் பாடங்களின் பின்னுள்ள வினாக்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. அதிகபட்சமாக 5 வினாக்கள்வரை பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படலாம். இதற்கு தயாராக, பாடங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு படிப்பது அடிப்படையாகும். மேலும் பாடங்களில் இடம்பெறும், ’சூத்திரங்கள், குறிப்புகள் மற்றும் உங்களுக்குத் தெரியுமா?’ ஆகியவற்றை ஆராய்ந்து புரிந்துகொண்டு படிப்பதும் அவசியம். இந்த ‘உள் வினா’க்களில் கணிசமானவை, பாடங்களின் பின்னுள்ள வினாக்கள் தொடர்பான, இதர வினாக்களாக இடம்பெறவும் வாய்ப்புள்ளது.
2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளுக்கு, பாடங்களில் இடம்பெறும் அனைத்து எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி கணக்குகளையும் அறிந்திருப்பது அவசியம். பாடநூலில் 10 அத்தியாயங்கள் இருப்பதால், அவற்றில் இருந்து தலா ஒரு வினாவை எதிர்பார்க்கலாம். மொத்த வினாக்களில் ஒன்றிரண்டு உள்ளிருந்து கேட்கப்படும் உருவாக்கப்பட்ட மற்றும்உயர் சிந்தனைக்கான வினாவாக இடம்பெறலாம்.
அதிக மதிப்பெண் பெற
முழு மதிப்பெண் பெற அனைத்து அத்தியாயங்களிலும் உள்ள எடுத்துக்காட்டு மற்றும்பயிற்சி கணக்குகளை முழுமையாக செய்துபார்ப்பது அவசியம். அந்த வினாக்களை மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பிரித்து தொகுத்துக் கொள்வதுடன், அவை இதுவரையிலான காலாண்டு / அரையாண்டு / திருப்புதல் தேர்வுகளில் எவ்வாறு வினாத்தாளில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வினாக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிப்பது மதிப்பெண் உயர்வுக்கு வழி செய்யும்.
வகுப்பறையில் ஆசிரியர் வழங்கும் பாடம் சார்ந்த கூடுதல் குறிப்புகளையும் தொகுத்து வைத்துக்கொண்டு, அவற்றை வழக்கமான பதில்களுடன் சேர்த்து எழுதுவது முழு மதிப்பெண்களை உறுதி செய்யும்.
திருப்புதலில் கவனம்
தேர்வு நெருங்கும் சூழலில், தற்போதைய நாட்களில் பெருமளவு திருப்புதலுக்கே ஒதுக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு முன்பாக ஓரிரு முழுத் தேர்வுகளை எழுதி பார்ப்பது முழு மதிப்பெண்ணுக்கான பாதையாகும்.
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் படிப்பதுடன், அவற்றை உடனடியாக எழுதிப் பார்ப்பதும் அவசியம். எழுதிப் பார்ப்பது மட்டுமே பிழையின்றி எழுதுவதற்கான முழுப் பயிற்சியாக அமையும். இதற்கு பள்ளியில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுவரையிலான தேர்வுகளின் விடைத்தாள்களில் இருந்து நமது பிரத்யேகத் தவறுகளை அடையாளம் காண்பதுடன், அடுத்தடுத்த பயிற்சிகள் மற்றும் தேர்வுகளில் அவற்றைதவிர்க்க முயல்வது அவசியம். திருப்புதலுக்கான காலகட்டத்தில் இவற்றை ஒரு தொடர்பயிற்சியாகவே மேற்கொள்ளலாம். விடைத்தாளில் குறிப்பிடத்தக்கத் தவறுகள் இருப்பின் ஆசிரியர் உதவியுடன் ஐயம் களைவதும் அவசியம். திருப்புதலில், அடிப்படை கணிதசெயல்பாடுகள் தொடர்பான பிழைகளைத்தவிர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.கூட்டல்-பெருக்கல்களை மாற்றிச் செய்யும் பிழைகள் குறிப்பாக அணிக்கோவையில் அதிகம் நேர்கின்றன.
தேர்ச்சி நிச்சயம்
பாடங்களின் பின்னுள்ள வினாக்களின் ஒரு மதிப்பெண் பகுதியை முழுமையாகப் படிப்பதுடன், அலகுத் தேர்வு பாணியில் அவற்றை பிரித்து எழுதிப் பார்ப்பதன் மூலம், 12 முதல் 15 வினாக்களுக்கு பதிலளித்து விடலாம். இதே வகையில் 2, 3 மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளுக்கும் பாடங்களின் பின்னுள்ள வினாக்களில் எளிமையானதை மட்டுமே படித்து எழுதிப் பார்க்கலாம்.
சுலபமான பாடப் பகுதிகள் மற்றும் கணக்குகள் அடங்கிய 1, 8, 9, 10 ஆகிய அத்தியாயங்களை குறிவைத்து படித்தால் கணிசமான மதிப்பெண்களை கூடுதலாகப் பெறலாம்.மேலும் இதிலுள்ள 9-வது அத்தியாயத்தில் சூத்திரங்களும் அவற்றின் அட்டவணைகளுக்குமான பகுதிகள் மூலம் மதிப்பெண்களை குவிப்பது எளிதாகும்.
கூடுதல் கவனக் குறிப்புகள்
‘அல்லது’ வகையிலான 5 மதிப்பெண் பகுதியில், 7 ஜோடி வினாக்களாக மொத்தம் 14 வினாக்கள் இடம்பெறும். பாடநூலின் 10 அத்தியாயங்களில், ஒரு சிலவற்றில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட வினாக்கள் இடம்பெற்றாக வேண்டும். ஆனால், ப்ளூ பிரிண்ட் வழிகாட்டுதல் இல்லாததால் அந்த வினாக்கள் எந்த பாடத்தில் இருந்து இடம்பெறும் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவே மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் அனைத்துப் பாடங்களையும் படிப்பது அவசியமாகிறது.
வகைக்கெழு பாடப் பகுதிகளில் 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கான சூத்திரங்கள் முக்கியமானவை. கணக்குகளில் படி நிலைகளுக்கும் மதிப்புண்டு என்பதால், வினாத்தாளின் எந்த வினாவையும் தவிர்க்காமல் விடையளிக்க வேண்டும்.
நேர மேலாண்மை
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கலாம். அவ்வாறே 2 மதிப்பெண் பகுதிக்கு 30, மூன்று மதிப்பெண் பகுதிக்கு 40,ஐந்து மதிப்பெண் பகுதிக்கு 70 என அதிகபட்ச நிமிடங்களை பிரித்து ஒதுக்கினால், எஞ்சிய 20 நிமிடங்களை விடைத்தாள் சரிபார்ப்புக்கு ஒதுக்கலாம்.
பாடக் குறிப்புகள் வழங்கியவர்: வெ.கணேசன், முதுகலை ஆசிரியர் (கணிதம்), நேரு அரசினர் மேல்நிலைப்பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...