பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில், மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும்,கெளரவிக்கவும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான கடலூர் மாவட்ட கலெக்டர், ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் கலெக்டர்
பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இதில், சுமார் 1,000 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றனர். பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் நலனுக்காவும் அக்கறையுடன் செயல்படுகிறார் பள்ளித் தலைமையாசிரியர் மனோகரன் என்று அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
அவருக்கு, தமிழக அரசு நல்லாசிரியர் விருது அளித்துள்ளது. இதற்காக, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதேபகுதியைச் சேர்ந்தவரும், கடலுார் மாவட்டத்தின் தற்போதைய கலெக்டருமான அன்புச்செல்வன் கலந்துகொண்டார். அவர், தனது சொந்தப் பணத்திலிருந்து, வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துக்கொள்வதற்காக ரூ 1 லட்சத்திற்கான காசோலையை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கினார்.
பின்னர், ``இந்தத் தொகையின்மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் 10, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' இது, மாணவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களைக் கெளரவப்படுத்துவதால், அவர்கள் மேலும் உற்சாகம் அடைவார்கள்'' என்றார். கலெக்டரின் இந்தச் செயலை மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...