பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, ஒன்பது பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று அறிவித்தது. வரும் மார்ச் - ஏப்.,ல் நடக்கும் விழாவில், இந்த விருதுகளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.இந்தாண்டில், ஏழு பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்மபூஷண் மற்றும், 118 பேருக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 34 பேர் பெண்கள்; 18 பேர் வெளிநாட்டவர்,வெளிநாட்டு வாழ் இந்தியர். இதைத் தவிர, 12 பேருக்கு மறைவுக்குப் பின் இந்த விருது வழங்கப்படுகிறது.மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள, விருது பெறுவோருக்கான பட்டியல் : பத்மவிபூஷண் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், ஜார்ஜ் பெர்னான்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ். பிரபல குத்துச்சண்டை வீரங்கனை, எம்.சி. மேரி கோம், கிழக்கு ஆப்பிக்க நாடான மொரீஷியசின் முன்னாள் அதிபர் அனிருத் ஜெகன்னாத், கர்நாடகாவைச் சேர்ந்த மறைந்த பெஜாவர் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வரதீர்த்த சுவாமி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் சாமுலால் மிஸ்ரா.
பத்மபூஷண் - தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜகனாதன், புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்ரா, பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பரீக்கர், பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோர்.பத்மஸ்ரீ - 118 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகிகள் லலிதா மற்றும் சரோஜா சகோதரிகள், சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன், கலைப் பிரிவில் மனோகர் தேவதாஸ் மற்றும் கலீ ஷாபி மகபூப் - ஷேக் மஹபூப் சுபானி சகோதரர்கள், அறிவியல் பிரிவில் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த, வி.கே. முனுசாமி கிருஷ்ணபக்தருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், நடிகை கங்கணா ரனாவத், பாடகர் அத்னான் சாமி, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் உள்ளிட்டோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...