'குரூப் - 1' பதவிக்கான நேர்முக தேர்வில் முறைகேடு நடக்காது' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் - 1 பதவிகளுக்கான, 181 காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு மார்ச், 3ல் முதல்நிலை தேர்வு நடந்தது. அதில், 2.29 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற, 9,442 பேருக்கு, ஜூலை, 12 முதல், 14 வரை பிரதான தேர்வு நடந்தது.இதில் தேர்ச்சி பெற்ற, 363 பேரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, வரும், 23 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.இந்நிலையில், நேர்முகதேர்வில் பென்சிலால்மதிப்பெண்களைகுறிக்க,தேர்வாணைய உறுப்பினர்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.
இதற்கு விளக்கமளித்து,டி.என்.பி.எஸ்.சி., செயலர்நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எந்த நேர்முக தேர்விலும், மதிப்பெண்களை பென்சிலால் குறிக்கும் வழக்கம், டி.என்.பி.எஸ்.சி.,யின் நடைமுறையில் எப்போதும் இல்லை.நேர்முகத் தேர்வில், தேர்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண், வல்லுநர் குழுவால் ஆலோசிக்கப்பட்டு, ஒருமித்த முடிவாக மட்டுமே வழங்கப்படும்.இந்த மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டு தாளில், பேனா மையால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...