Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நல்லாட்சிக்கு அடிப்படை உள்ளாட்சி! - முனைவர் மணி கணேசன்

ஒருவழியாக உச்சநீதிமன்றம் தமிழகத்தில்
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட வார்டு வரையறை மற்றும் உரிய இட ஒதுக்கீடு முறை பின்பற்றாத  9 மாவட்டங்கள் தவிர, ஏனைய பிற மாவட்டங்களில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்திட பச்சைக்கொடி காட்டியுள்ளது யாவரும் அறிந்ததே. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தாமல் பஞ்சாயத்து ராஜ் எனும் அடிப்படை உரிமை சாமானிய மக்களுக்குக் கிடைக்கப் பெறாத அவலநிலைக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
          நேரடித் தேர்தலுக்கு மாற்றாக வழக்கத்திற்கு மாறாக மறைமுகத் தேர்தல் என அவசரப் சட்டம் பிறப்பிப்பு, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களைப் புதிதாக உருவாக்கி அங்கு இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறை செய்யாமை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர்த்து ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என்பது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது நடப்பாக உள்ளது. மேலும், நீதிமன்றக் கதவுகளை விடாமல் தட்டும் எதிர்க்கட்சிகளின் நோக்கும் போக்கும் காலம் கடந்து நடக்கவிருக்கும் பகுதியளவிலான ஊரக உள்ளாட்சித் தேர்தலை மேலும் தள்ளிப்போட வைக்கும் அசாதாரண சூழலையே உண்டு பண்ணும். இதற்கு ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் விடாப்பிடியான நீதிகோரும் தொடர்நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைகள் கடந்த 2016 இல் தொடங்கி விட்டன. 
           அதன்படி, தமிழகத் தேர்தல் ஆணையம் மாநிலத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்துப் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து தக்க மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய சுமார் 19 ஆயிரம் மனுக்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் மற்றும் தொகுதி வரையறைகள் செய்யப்பட்டு அவை உச்சநீதிமன்றத்தின் மேலான பார்வைக்குத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கையினைத் திரும்பப்பெற்று தற்போது புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
          சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தூத்துக்குடி முதலான 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக நடைபெறும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, டிசம்பர் 9 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 30 கமில் நிறைவடைந்து பதிவான வாக்குகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி 2 அன்று எண்ணப்பட்டு தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பு ஜனவரி 6 அன்று நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கைத் தெரிவிக்கிறது. மேலும், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல்கள் ஜனவரி 11 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
          இத்தகு சூழலில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழக சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதைக் காரணம் காட்டி பொதுவாகவே அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள விருப்பமின்றித் தவிர்க்கவே விரும்புகின்றன என்பது அரசியல் நோக்கர்களில் கருத்தாகும். புதிதாகத் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்று வெளிப்படையாக உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துவிட்டது. பொதுமக்கள் செல்வாக்கு மிகுந்த வெகுவிரைவில் கட்சி அரசியலில் ஈடுபடவிருக்கும் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை அறிவித்திருப்பதும் முக்கியமானது. ஏனைய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் திரிசங்கு நிலையிலேயே உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் போதிய ஆர்வமில்லாமல் அணுகி வருவது கண்கூடு. 
          இவர்கள் அனைவரும் ஒன்றை அறிய தவறிவிடுகின்றனர். கட்சி அரசியலைத் தாண்டி சாமானிய மக்கள் தம் நல்லதொரு இருத்தலை உறுதி செய்யவும் தரமான உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக தன்னிறைவு பெறவும் சிறப்பான மக்களாட்சி முறையை உலகிற்கு வழங்கவும் உள்ளாட்சித் தேர்தல் வழிவகை செய்கிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காரணத்தால் பொதுமக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் நிறைவேற்றிக் கொள்ளமுடியாத அவலநிலை உள்ளது. உரிய உகந்த நியாயமாகப் கிடைக்க வேண்டிய ஊரக மற்றும் உள்ளாட்சி நிதி எதையும் வேண்டிப்பெற முடியாத சூழல்கள் காரணமாக கிராம வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது. நகர் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது. மாநகராட்சிகள் மாபெரும் குப்பைக் கிடங்குகளாகக் காட்சியளிக்கின்றன. மக்கள் குடிநீர் வேண்டி நித்தமும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தம் அன்றாட அடிப்படை மற்றும் அவசியத் தேவைகள் குறித்து முறையிடுவதிலும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது கசப்பான நடப்பாக உள்ளது. 
          சாமானியனின் மனசாட்சியாக செயல்படும் உள்ளாட்சியை அதன் மக்கள் நலன் பேணும் நிர்வாகத்தை வளர்த்தெடுக்க மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரின் தலையாயக் கடமையாகும். சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, பொது கழிப்பிட வசதி, சுற்றுப்புறச் சுகாதாரம் முதலான அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு போதிய நிதியாதாரங்கள் கிடைக்கப் பெறாமல் காணப்படும் அவலம் சகிப்பதற்கில்லை. சாமானியர்களின் குரல் எதிரொலிக்கும் இடமாக எப்போதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைக் காட்டிலும் அதிகம் ஊராட்சி மன்றங்களே இருக்கின்றன. ஏனையோருக்கு இருக்கும் அதிகாரங்களைவிட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
         
           ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஊதியம் உட்பட நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை எளிதில் தீர்க்க மேலிடத்தின் நிதியுதவி வேண்டிச் செய்வதறியாது திகைத்து மாதக்கணக்கில் காத்துக் கிடக்கும் போக்குகள் மலிந்து காணப்படுகின்றன. குறிப்பாக, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திறம்படச் செயல்படவும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளவும் சமுதாயப் பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படவும் சாதி, மதம், இனம் கடந்து ஒற்றுமையாகவும் ஒருமித்தும் வாழவும் தகுந்த குடிமைப் பயிற்சிகளைப் பெறத்தக்க களமாக உள்ளாட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. 
          எதிர்கால தலைமுறையினரும் மாணவர்களும் இளைஞர்களும் பிற்காலத்தில் நாட்டுக்கு உழைக்கும் நல்லோராக மாற அல்லது மாற்ற உள்ளாட்சி இன்றியமையாத ஒன்றாகக் திகழ்வது அறியத் தக்கது. இத்தகைய நல்ல பல நோக்கங்களையும் பயன்களையும் கருத்தில் கொண்டு கட்சி மற்றும் ஆட்சி நலன் சார்ந்த விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முன்வர வேண்டும். நீதிக்குப் புறம்பான வகையில் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை மேற்கொள்வதில் நியாயமில்லை. வளர்ந்து வரும் கட்சிகள் மக்கள் பணியாற்ற தலைசிறந்த களமாக உள்ளாட்சியைத் தேர்ந்தெடுத்து ஊழியம் மேற்கொள்வதை உறுதிப்படுத்துதல் நலம். 
          ஊரக மற்றும் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பங்குபெறாது தவிர்க்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய தக்க சட்டம் இயற்றுவது அவசர அவசியமான ஒன்றாகும். அதேபோல், மாநில தேர்தல் ஆணையம் பாகுபாடின்றி அனைவருக்குமான தன்னாட்சி பெற்ற பொது அமைப்பாக மாற்றுக் கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல் நடுவுநிலையுடன் செயற்படுதல் இன்றியமையாதது. உள்ளாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் முன்வரவேண்டும். மக்களாட்சிக்கு மட்டுமல்ல நல்லாட்சிக்கும் அடிப்படை உள்ளாட்சி என்பதை ஒவ்வொருவரும் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டு தவறாமல் வாக்களிப்பது என்பது அவசியம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive