தமிழகத்தில் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் முதல் வேட்பு மனுக்கள் தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெரும். ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்ததால், ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மாநிலம் முழுவதும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் முறையிட்டனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.
அதில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம். மேலும், புதிய மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த 4 மாதங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்து, அதற்கும் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தை பொருத்தமட்டில், பஞ்சாயத்து தேர்தல் சட்ட விதிகளின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் இன்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;
* கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை.
* ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும். வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 17-ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 19-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும்.
* 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்.
* நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் இட ஒதுக்கீடுகள் முறையாக, முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.
வாக்குசீட்டு முறையில் தேர்தல்:
கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...