
வேலூர்
அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி தசரதன். இவரது
மகன் தேவேந்திரன். இவர் அருகில் உள்ள பென்னாத்தூர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்பு கணிதம், அறிவியல் பிரிவை எடுத்து
படித்து வருகிறார். பள்ளி பருவத்தில் இருந்தே இயற்பியல், வேதியியல் மீதான
தனது ஆர்வத்தை பல வகைகளில் சோதிக்க முயற்சித்து வந்திருக்கிறார். தனது
மகனின் அறிவியல் ஆர்வத்துக்கு ஊக்கமளித்து வந்துள்ளார் தேவேந்திரனின் தந்தை
தசரதன். தந்தையின் அந்த உந்துதல்தான் அவனுக்கு பெட்ரோலுக்கு மாற்றாக
தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய
தூண்டியது. ஒருநாள் தனது தந்தையின் மொபட்டை எடுத்து தேவேந்திரன் ஓட்ட
முயற்சிக்க, அதை பார்த்த அவரது தந்தை தசரதன், ‘வண்டி என்ன தண்ணியிலா ஓடுது?
பெட்ரோலை வேஸ்ட் செய்யாதே’ என்று கண்டித்தாராம். அதை கேட்ட நொடிதான்
தண்ணீரில் வண்டியை ஓட வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தால் என்ன? என்று
நினைக்க வைத்து அதை செயல்வடிவமும் கொடுக்க வைத்தது. இவரது இந்த
ஊக்கத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி,
ஆசிரியர்கள் என்.கோட்டீஸ்வரி, ஜி.மஞ்சுளா ஆகியோர் மேலும் வலு சேர்த்து
தங்கள் பங்களிப்பை வழங்கினர். பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரை நிச்சயம்
எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்ற உறுதியுடன், ஆசிரியர்களின்
ஆலோசனையுடன் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்து
எரிபொருளாக பயன்படுத்த எடுத்த முயற்சியில் மாணவர் தேவேந்திரன் வெற்றி
கண்டார். இதுபற்றி மாணவர் தேவேந்திரன் கூறியதாவது: நான் 10ம் வகுப்பு
படிக்கும்போதில் இருந்ேத தண்ணீரில் வாகனத்தை ஓட வைக்கும் புதிய
தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினேன். எனது இந்த முயற்சிக்கு
தலைமை ஆசிரியர் உமாதேவன், ஆசிரியர்கள் கோட்டீஸ்வரி, மஞ்சுளா ஆகியோர்
ஆலோசனைகள் வழங்கினர். அதன்படி, தண்ணீரில் ஹைட்ரஜனை பிரித்து அதை வாகன
இன்ஜினுக்கு நேரடியாக அனுப்பினோம். முதலில் கண்ணாடி பாட்டிலில் ஹைட்ரஜனை
பிரித்தபோது உஷ்ணமானது. அதோடு ஹைட்ரஜன் செல்லும் குழாயும் உருகும் நிலை
ஏற்பட்டது. இதனால் கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக கனமான பிளாஸ்டிக் பால் கேனை
பயன்படுத்தினேன். இதன் மூலம் அதிக சூடாகும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.
அலுமினியம், ரப்பர், துத்தநாக தகடுகள் கொண்ட வரிசைகள் அடங்கிய ‘டிரைசெல்’
அமைப்பில் தண்ணீரை வேகமாக செலுத்தி மின்னூட்டம் வழங்கியபோது தண்ணீரில்
இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு அதை மீண்டும் தண்ணீர் கேனுக்கு கொண்டு
செல்லும் வடிவமைப்புக்கு தலைமை ஆசிரியர் உமாதேவன், ஆசிரியைகள் மஞ்சுளா,
கோட்டீஸ்வரி ஆகியோர் வடிவம் கொடுத்தனர்.முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் 3
ஸ்பூன் உப்பை சேர்த்தோம். தண்ணீரில் உப்பை சேர்த்ததால் அது வினையூக்கியாக
மாறி ஹைட்ரஜனை பிரித்து எரிசக்தியாக வாகனத்தை இயக்கியது. வாகனம் வெளியில்
தள்ளும் ஆக்சிஜனால் சுற்றுச்சூழலுக்கும் மாசில்லாததுடன், உலகுக்கும்
சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழியும் கிடைத்துள்ளது. இந்த கட்டமைப்பை
உருவாக்க மொத்த செலவே ₹1,500தான். ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் டிரைசெல்
அமைப்பு செயல்படுவதற்கான பேட்டரிக்கு ₹1,000ம் செலவானது. பெட்ரோல் மூலம்
வாகனம் எத்தனை கி.மீ வேகம் செல்லுமோ, லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் தருமோ?
அதே பலனை தரும். இவ்வாறு அவர் கூறினார். இவரது கண்டுபிடிப்பை தேசிய
வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற தலைவர் மங்கல்யான் விஞ்ஞானி மயில்சாமி
அண்ணாதுரை வேலூர் விஐடியில் நடந்த நாளைய விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு பார்த்து வியந்ததுடன், மாணவனின் கண்டுபிடிப்பை
அங்கீகரிக்கும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
என்று உறுதியளித்திருக்கிறார். அதோடு மாநில, தேசிய அளவிலான அறிவியல்
கண்காட்சிகளில் தனது படைப்பை சமர்ப்பித்து விருதுகளையும்,
சான்றிதழ்களையும், பதக்கங்களையும் குவித்துள்ளார் மாணவர் தேவேந்திரன்.
மாநில அளவிலான கண்காட்சியில் இவருக்கு விருதுடன், ₹50 ஆயிரம்
ரொக்கப்பரிசும் கிடைத்திருக்கிறது. அதோடு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்,
மாணவர் தேவேந்திரனின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமைபெறவும், அடுத்தக்கட்ட
ஆராய்ச்சிக்கு உதவவும் உறுதி அளித்திருப்பதுடன், தண்ணீரில் இயங்கும்
ஜெனரேட்டரை உருவாக்குவதற்கான உதவிகளை மாணவனுக்கு அளித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த மாணவருக்கு உயர்கல்வி சீட் தருவதில் சென்னை ஐஐடி
முதற்கொண்டு முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்போதே போட்டி போட்டு வருகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...