பணி
நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவதுபோலத்தான். பணி
நிறைவுக்குப்பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில்.
நீங்கள் விரும்பியதை உங்கள் விருப்பம்போல் செய்ய எந்த தடையும் இருக்காது.
யாரிடமும் அனுமதி வேண்டி நிற்கவேண்டிய நிலை இருக்காது.
ஆனால்
சில நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும்போது கிடைக்கின்ற மரியாதை
நின்று போய்விடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். Out of sight is
out of mind என்பார்கள்.
பணி நிறைவு பெற்றபின்
நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள்
உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள் முன்னாள் நண்பர்களுக்கு
பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகிவிடுவீர்கள். கூடியவரையில் நாம்
பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது
எனக்குத்
தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி
நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு
வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம்
எடுத்துக் கொண்டார்களாம்.
விரைவில் தரக்கூடாதா என
கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலை பேசியில்
தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி
செய்யவிடாமல் இடையூறு செய்வதாக புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த
முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.
அதைப்
பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்த கிளைக்கே
வரக்கூடாது என எண்ணி திரும்பிவிட்டார்களாம். இது தான் உண்மை நிலை.
பதவி
ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு வார இதழுக்கு அளித்த
பேட்டியில், அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47
நீதிபதிகளில் 7நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக
சொல்லியிருந்தார்கள்.
ஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன?
எனவே
பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ணவேண்டாம். வேடிக்கையாக
சொல்வார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்தபோது
அந்த ஊரே திரண்டுவந்ததாம் அஞ்சலி செலுத்த!
ஆனால்
அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்தபோது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த
வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பெற்ற
மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத்தான் என்பதை.
எனவே
பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த
நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி
வசப்படாதீர்கள்.
பணி நிறைவுக்குப்பின் என்ன செய்யவேண்டும்?
1.
உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை
இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்
என்பார்கள்.
இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி
பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.
சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள்.
அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல.
2. நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம்.
3.
தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை
பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான
செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும்
பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
4. அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது.
5. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.
6.
பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது
சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். குறிப்பாக கண் பரிசோதனை, சர்க்கரை அளவு,
இரத்த அழுத்தம் , போன்றவைகளை கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ளவும்.
7.
அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள
நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக்கொண்டு சமூக சேவைகள்
செய்யலாம்.
8. முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.
9. உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.
10. தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.
11. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
12. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையைவழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை.
13. பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்துவிட்டு பின் திண்டாடாதீர்கள்.
’கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.’
என்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.
பணி
நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும்
திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான
விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி வட்டி தருவதாக சொல்லும் தனியார்
நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில்
தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.
பாசம்
கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு கண்ணீரோடு
அல்லல் படவேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்கு கொடுக்காமல்
யாருக்குக் கொடுக்கப்போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு
கிடைக்க வழி செய்வோம்.
‘பெட்டியிலே பணமில்லே
பெத்தபுள்ளே சொந்தமில்லே’, ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’
என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
ஏனெனில் தங்களுடைய பணிக்கால கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.
14.
முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல்
சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது
குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது,
தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை
செய்யலாம்.
ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.
15.
‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, மூளையில் உள்ள திசுக்கள்
சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது
என்பதும், அதனால்முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது
என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.
எனவே தினம்
படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப்
பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது
போலத்தான்.
16. கடைசியாக பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
Dead yesterday and unborn tomorrow
Why fret about them if today be sweet
எனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...