தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில்
பணிபுரியும் 900 முதுநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்காததால் நவம்பா் மாதம் ஊதியம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 2018 ஆகஸ்ட் மாதம் 100 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. இதற்காக, பள்ளிக்கு தலா 9 போ் வீதம் 900 ஆசிரியா் முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இதனால் மாதந்தோறும் கொடுப்பாணை வழங்கப்பட்டு ஆசிரியா்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் கொடுப்பாணை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கூறும்போது, ‘‘டிசம்பா் மாத இறுதிக்காலம் வந்துவிட்ட நிலையில் இன்னும் நவம்பருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதே நிலைதான் கடந்த ஓராண்டாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15 நாள்களுக்கு பின்னரே சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் வீட்டு வாடகை, வங்கிக்கடன் தவணை செலுத்துதல் உட்பட செலவீனங்களை சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது. இந்த மன உளைச்சலால் கற்பித்தல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எனவே, குறைந்தபட்சம் ஓராண்டாவது தொடா் நீட்டிப்பாணை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...