அயோத்தியில் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களிடம், தன்னுடைய காலணியைத்
தைத்து வருமாறு கொடுத்தனுப்பிய ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தியின் கஜூராஹத் அரசுத் தொடக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம்
நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ அண்மையில் வைரலானது. அதில் 3 சிறுவர்கள்
கையில் பையோடு நடந்து சென்றனர். அவர்களை உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்
வழிமறித்தார். 'ஏன் பள்ளியில் இருக்காமல் இங்கே வருகிறீர்கள்?' என்று
கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'ஆசிரியர் ரஜினி மித்ரா எங்களைச் செருப்பைத் தைத்துக்கொண்டு வருமாறு அனுப்பியுள்ளார்' என்று சிறுவர்கள் கூறினர்.
இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கல்வி அதிகாரி சந்தோஷ் தேவ்
பாண்டே, தற்காலிக ஆசிரியர் ரஜினி குப்தாவை வேலையில் இருந்து நீக்கி
உத்தரவிட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த ஆசிரியர் ரீனா குப்தா,
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரி சந்தோஷ் பாண்டே கூறும்போது, ''இது தொடர்பான
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பதற்காகவே பள்ளிக்கு
வருகின்றனர். அவர்களை வேறு வேலை செய்யுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்துவது
தெரிந்தால், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்தியா முழுவதும் சில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தரை துடைப்பது,
கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துவது, மதிய உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களைக்
கழுவுவது உள்ளிட்ட சில செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக அவ்வப்போது செய்திகள்
வெளியாவது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...