'பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட, 128
பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பள்ளி
கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வியின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, 2018 - 19ல் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, மாவட்டத்துக்கு, தலா நான்கு பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களில், 128 பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒவ்வொரு மாவட்டத்திலும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தலா ஒரு பள்ளிக்கு, பரிசு தொகை வழங்கப்படும். ஆகஸ்ட், 15, நவ., 14 மற்றும், ஜன., 26ம் தேதிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாதம் ஒரு நாளாவது, பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடந்திருக்க வேண்டும்.அதிக நன்கொடை பெற்று, பள்ளி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆலோசனை கூட்டங்களில், போதிய உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகளின் படி, பரிசு தொகைக்கான பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். அந்த பட்டியலை, வரும், 10ம் தேதிக்குள், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...