உடுமலை
கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
மாதிரிப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டிலிருந்து,
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், கட்டமைப்பு
உள்ளிட்ட திறன்கள் அடிப்படையில், அரசின் சார்பில் மாதிரி, பள்ளிகள் தேர்வு
செய்யப்படுகின்றன.இவ்வாறு தேர்வு செய்யப்படும் பள்ளிகளின் கட்டமைப்பு
மற்றும் வசதிகளை மேம்படுத்திக்கொள்ள, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும்
வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் மூன்று பள்ளிகள்
தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், உடுமலை கல்வி மாவட்டத்தில், பாரதியார்
நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்றாக
தேர்வாகியுள்ளது.பெண்களின் விடுதலைக்கு போராடிய அந்த முண்டாசு கவிஞரின்
பெயரில் துவங்கி, அவரின் கூற்றுக்கும் இணையாக, பெண்களுக்கு பெருமை சேர்த்து
வருகிறது இப்பள்ளி. கடந்த, 1982க்கு முன்பு, மாணவியருக்கான விடுதியாக
இப்பள்ளி செயல்பட்டது. தொடர்ந்து, 1982ம் ஆண்டிலிருந்து உயர்நிலையாக
செயல்பட்டு, 1990ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில்,
தற்போது, 1,074 மாணவியர் படிக்கின்றனர். மறையூர், மூணார், வால்பாறை என பல
மலைவாழ் பகுதிகளிலிருந்தும் விடுதியில் தங்கி இங்கு படிக்கின்றனர்.
நுாற்றாண்டை கடந்த கட்டமைப்பு, கம்ப்யூட்டர் ஆய்வகம், சுற்றுச்சூழல் தகவல்
பரப்பு மையம், மாணவியரின் கலைத்திறன்களை வெளிப்படுத்த கலா மண்டபம்,
ஆசிரியர்களுக்கான கூட்ட அரங்கம் என கட்டமைப்பில் நிறைவு பெற்றுள்ளது.பாட்டு
பாடி, இலக்கணமும், இலக்கியமும் கற்றுதரும் தமிழாசிரியர்கள், ஆங்கில
உச்சரிப்போடு, மொழி அறிய ஆங்கில பாடத்துக்கான நவீன தொழில்நுட்பத்துடன்
கூடிய ஆய்வகம், மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்
ஆசிரியர்கள், என கல்வியோடு கலையை வளர்க்கும் பள்ளியாகவும் செயல்படுகிறது.
கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறைகளும் இயற்கையை பாதுகாக்கவும்,
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காய்கறித்தோட்டம் அமைக்கும்
திட்டத்தை, சில ஆண்டுகளாக பள்ளிகளில் ஏற்படுத்தி வருகிறது.தலைமையாசிரியர்
விஜயலட்சுமி கூறுகையில், நல்லாசிரியர் விருது பெறும் பெருமையை விட, எங்கள்
பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பல மடங்கு மகிழ்ச்சி
அளிக்கிறது. இந்த விருது, பள்ளியை அடுத்த நிலைக்கு தரம் உயர்த்திக்கொள்ள
பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், பள்ளியில் கட்டமைப்புகளை புதுப்பித்து,
மாணவியருக்கான கழிப்பறைகளை மேம்படுத்துதல், பள்ளி மைதானத்துக்கான இடத்தை
சமன்படுத்துதல், கூடுதல் கம்ப்யூட்டர்கள், வகுப்பறைகளில் ஒலி பெருக்கி
அமைப்பது, பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைத்தல், மேலும், கூடுதல்
வசதிகளையும் ஏற்படுத்த, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது, என்றார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» உடுமலை கல்வி மாவட்டத்தில் தேர்வானது மாதிரி பள்ளி!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...