அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் முன்கூட்டியே துவங்கியுள்ளன.
முதல் நாளிலேயே வினாத்தாள், 'லீக்' ஆனதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.
அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜி.,
கல்லுாரிகள், தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. இவற்றில், தன்னாட்சி பெற்ற
கல்லுாரிகள், தாங்களாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை நடத்துகின்றன.
விடைத்தாள்களும், அந்தந்த கல்லுாரிகளாலேயே திருத்தப் படுகின்றன. அண்ணா
பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளுக்கு, கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு
அலுவலகம் வழியாக, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இணைப்பு கல்லுாரிகள்,
உறுப்பு கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை
வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு கட்டுப்பாட்டு துறையிலும், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு
துறையிலும், முந்தைய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக,
குற்றச்சாட்டுகள் உள்ளன.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு
பதிவு செய்து விசாரிக்கின்றனர். முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு பெண்
அதிகாரியும், சில பேராசிரியர்களும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலையின் தேர்வுகளில், தொடர்ந்து வினாத்தாள், லீக்
பிரச்னை எழுந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு, மழை காரணமாக
முன்கூட்டியே துவங்கியுள்ளது. இதன்படி, தேர்வுகள் நேற்று துவங்கின. நேற்று
பிற்பகலில் நடந்த வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே, லீக்
ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்,
அனைத்து கல்லுாரி தேர்வு மையங்களுக்கும் அவசர தகவல் அனுப்பி, பழைய
வினாத்தாளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
மேலும், தேர்வை பிற்பகல், 2:30 மணிக்கு நடத்துமாறு உத்தரவிடப்பட்டு, புதிய
வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப் பட்டது. தேர்வின் துவக்கத்திலேயே வினாத்தாள்
லீக் ஆகியிருப்பது, அண்ணா பல்கலையின் மாணவர்களை அதிர்ச்சி அடைய
செய்துள்ளது. வினாத்தாள் லீக் ஆனதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை
துவங்கியுள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை,
அதிகாரபூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
source - dinamalar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...