அரசுப் பள்ளிகளுக்கு சத்தான காலை உணவு, மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, சான்றிதழ்கள், பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நெகிழ வைக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த துபாய் வாழ் தமிழர் ரவி சொக்கலிங்கம்.
சென்னையில் ரயில்வே பள்ளியில் படித்த அவர், வேலைக்காக மைசூருவில் குடியேறி, தற்போது துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில், மூத்த தரக் கட்டுப்பாடு மேலாளராக உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, சர்வீஸ் டூ சொசைட்டி (Service to Society) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பில், சென்னை, மைசூரு, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தனை பள்ளிகளுக்கும் தொடர்ந்து உதவி செய்வது எப்படி சாத்தியமாகிறது? இதுகுறித்து நம்மிடையே விரிவாகப் பேசினார் ரவி சொக்கலிங்கம்.
''சரியான திட்டமிடல் இருந்தாலே பாதி வெற்றி அடைந்துவிடுவோம். இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே வாசிப்புப் பழக்கம் இருந்தது. உதவுபவர்கள் குறித்து இதழ்களில் நிறைய படித்திருக்கிறேன்.
எத்தனை நாட்கள்தான் உதவி செய்பவர்கள் குறித்துப் படிப்பது, நாமே உதவ வேண்டும் என்று யோசித்தேன். வீடு, கார், சுற்றுலா என வழக்கமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், இல்லாதவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன். முதல் முடிவாக உறவினர்கள், நண்பர்களிடத்தில் கையேந்தக் கூடாது; நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும், அவர்களாக உதவ முன்வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டேன்.
அடிப்படைத் தேவையான உணவை, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க ஆரம்பித்தேன். தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவத் தொடங்கினேன். எனது சம்பளம், மனைவி, மகன், மகள் வருமானத்தில் ஒரு பங்கை இதற்காகச் செலவிட்டோம். ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் விவரங்களைப் பகிர்ந்தேன். அதைப் பார்த்த நண்பர்கள் அவர்களும் உதவுவதாகக் கரம் கோத்தனர். இப்போது சுமார் 10 நண்பர்கள் தொடர்ந்து எல்லா உதவிகளுக்கும் பங்களித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 57 அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேரில் சந்தித்துப் பேசினேன். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பதும் அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குவதும் தெரிந்தது. அதனால் செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ.10 ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 110 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பிறந்த நாள் பரிசுகளையும் கொடுத்திருக்கிறோம்.
படித்த பள்ளி, கல்லூரிக்கு உதவி
சென்னையில் நான் படித்த ரயில்வே பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 139 மாணவர்களுக்கு முழு கல்விச் செலவையும் ஏற்று, கடந்த 7 வருடங்களாக உதவி வருகிறோம். பணமாக அளிக்காமல் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் காசோலை அளிப்பதுடன், பொருளாக வாங்கிக் கொடுக்கிறோம். இதுவரை 20 பொறியியல் கல்லூரிகளில், சிவில் மாணவர்களுக்காக வழிகாட்டல் பயிற்சி முகாமை நடத்தி இருக்கிறோம். அதில் ஆளுமைத் திறன் வளர்ப்பு, ரெஸ்யூம் எழுதுவது, வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மை மாணவ/ மாணவிக்கு பதக்கம் வழங்கும் திட்டத்தில், 52 பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 1-ல், பள்ளி தொடங்கிய அன்று 5,000 மாணவர்களுக்கு விதை பென்சில் வழங்கப்பட்டது'' என்று புன்னகைக்கிறார் ரவி சொக்கலிங்கம்.
மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்த பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதுகுறித்துப் பேசும் அவர், ''கடந்த காலத்தில் சமூக வலைதளங்களில் இந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. நல்லாசிரியர்கள் பலர் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்காமலேயே பணியாற்றினர். அவர்களைக் கவுரவிக்கும் விதமாக கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 25 பேருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. அதேபோல ஆசிரியராகப் பணிபுரியும் கணவன், மனைவி தம்பதிக்கு 'ஆசிரியர் இணையர் விருது' வழங்கினோம்.
பணியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆன ஆசிரியர்களுக்கு அனுபவத்தோடு ஒருவித அயர்ச்சியும் சலிப்பும் ஏற்பட்டிருக்கும். அதைப் போக்கும் விதமாக அவர்களுக்கும் விருதுகளை அளித்தோம். துப்புரவுப் பணியாளர்களின் வேலையையும் அங்கீகரிக்கும் விதமாக 2019, தைப் பொங்கலில் 25 பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
வேலைவாய்ப்புக்கும் வழிகாட்டல்
துபாய்க்கு வேலை தேடி வரும் இந்தியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த 12 வருடங்களில் 47 பேருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். வேலைக்காக தவறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு துன்புறுத்தப்படும் இளைஞர்களை மீட்டு, பாதுகாப்பாக தாய்நாடு அனுப்பி வைத்துள்ளோம்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 50 பள்ளிகளில் மாணவ வாசகர் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 72 பள்ளிகளில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய வாழ்த்து அட்டை வழங்கப்பட உள்ளது. பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்து இதுவரை 376 நிகழ்வுகள் நடத்தப்பட்டு Service to society -S2S என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளோம்'' என்கிறார் ரவி சொக்கலிங்கம்.
குடும்பம், வேலை தாண்டி எப்படி இதற்காக அதிக நேரம் செலவிட முடிகிறது என்று கேட்டபோது, ''மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது சத்திய வாக்கு. என் குடும்பத்தினர் மைசூருவில் வசிக்கின்றனர். நான் துபாயில் உள்ளேன். வேலை முடிந்து மாலை 2 மணி நேரம், பள்ளி சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கிவிடுவேன். மனைவியும் அங்கிருந்தே எனக்கு உதவுவார்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. அதில் ஆசிரியர்களும் உள்ளனர். பணம் சார்ந்த விவகாரங்களைத் தங்கை மகன் பார்த்துக் கொள்கிறார். அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகி உள்ளது. ஊர் கூடித் தேர் இழுக்கிறோம். அரசுப் பள்ளிகள் மீண்டு வரட்டும்'' என்கிறார் ரவி சொக்கலிங்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...