நன்றி குங்குமம் டாக்டர்
'தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக வேண்டியதில்லை' என்று ஓர் ஆங்கில சொல்லாடல் உண்டு. ஆனால், அத்தகைய பெருமை கொண்ட ஆப்பிளைக் காட்டிலும் சிறந்தது நெல்லி. அதனால்தான் தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழ வேண்டும் என்று தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை அதியமான் ஔவைக்குக் கொடுத்த வரலாறு உண்டு. முதுமையடைந்து விட்டாலும் கூட ஔவை நெடுநாள் வாழ வேண்டும் என்பதற்காக நெல்லிக்கனியைக் கொடுத்தார் அதியமான். ஏனெனில், ஆப்பிளை விட, ஆறு மடங்கு நல்ல மருத்துவ மாண்பு உடையது நெல்லிக்காய்.
இதுநாள்வரை நாம் நெல்லிக்காயில் இருக்கிற வைட்டமின் சி சத்து மட்டும்தான் நோய் எதிர்ப்புத் தன்மையைத் தருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம்
ஆனால், வைட்டமின் சியைப் போல மற்றோர் காரணமும் இருக்கிறது. நெல்லிக்காயில் இருக்கிற Polyphenols என்கிற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்திக்கு, நோய்க்கிருமிகளைத் தடுப்பதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று நவீன ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. இதைவிட முக்கியமானது என்னவென்றால், மற்ற உணவுப்பொருட்களில் இருக்கிற வைட்டமின்கள் எல்லாம் வெயிலில் அதன் தன்மையை இழந்துவிடும்.
ஆனால், வைட்டமின் சியை நேரடியாக வெயிலில் உலர வைத்தால் கூட குறைவதில்லை. அதன் சத்து, மருந்து தன்மையோ குறைவதில்லை என்பதையும் ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் நெல்லிக்காயில் இருக்கிற கனிமப் பொருட்கள். வெயிலினாலும் கூட அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கிற ஒரு பண்புடையதாக இருக்கிறது. இன்றைக்கு பச்சைத் தேயிலையை கொதிக்க வைத்த நீருடன் கொதிக்கவைத்து குடிக்கிற பானம் பிரபலமாக Green tea என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் இருந்தாலும் கூட, நெல்லிக்காயில் இருக்கிற பாலிபினால் இன்னும் மிகச் சிறப்பு வாய்ந்தது.
நெல்லிக்காயை முதலில் கடித்தவுடன் நமக்குத் தெரிவது புளிப்புச்சுவை. கொஞ்ச நேரம் கழித்து ஒரு துவர்ப்புச் சுவை தெரியும். பிறகு கொஞ்சம் தண்ணீரை பருகினால் இனிப்பாக இருக்கும். உப்பு, காரம் ஆகிய இரண்டைத் தவிர பிற நான்கு சுவைகளும் இருக்கிற காரணத்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய
மூன்றையுமே சமன்படுத்தக்கூடிய வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு. அதனால்தான் நோய் வராமல் தடுப்பது மட்டுமல்லாமல் முதுமை வராமல் தடுப்பதாகவும் நெல்லிக்காய் இருக்கிறது. காயகற்பம் மருந்துகளிலும் சிறந்த மருந்தாக நெல்லியை சித்த மருத்துவம் சொல்கிறது. அதனால்தான் இதனை நோய் எதிர்ப்பு அமைப்பை அது Immunomodulant என்றும் நாம் சொல்கிறோம்.
தொடர்ந்து 45 நாட்கள் நெல்லிக்காயை தேனுடன் ஊற வைத்து உட்கொண்டு வந்தால் தலைமுடி நரைப்பது குறையும். தலை முடி கருகருவென்று வளரும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கூந்தல் தைலமாகவும் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெடுங்காலமானாலும் இளமையுடன் வாழ்வதற்கு அடிப்படையாக பயன்படுத்துகிற லேகியம் கூட நெல்லிக்காயை அடிப்படையாகக் கொண்டு செய்வதுதான். ஒரு காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நெல்லிக்காய் கிடைத்துக் கொண்டிருந்தது.
தென் மாநிலங்களைப் பொருத்தவரை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மட்டுமே நெல்லிக்காய் வந்து கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு ஆண்டு முழுவதும் கூட நெல்லிக்காய் கிடைக்கிறது. நெல்லிக்காய் விழுதினுடன் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகள் மகிழ்ச்சியாக உட்கொள்வார்கள். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு நெல்லிக்காயையும் மஞ்சளையும் சேர்த்து பயன்படுத்துவது வழக்கம். நெல்லிக்காயை உலர வைத்து பயன்படுத்துவதற்கு நெல்லிவற்றல் என்று பெயர்.
நெல்லிமுள்ளி என்றும் சில பகுதியில் கூறுவார்கள். காட்டு நெல்லிக்காய் சிறந்ததா அல்லது பெருநெல்லி சிறந்ததா என்று சிலர் குழப்பமடைவார்கள். வடிவம் என்பதன் காரணமாக அவற்றில் நீர்ச்சத்து கொஞ்சம் அதிகமாக இருக்கலாம், நார்ச்சத்து கூட இருக்கலாம். ஆனால், இரண்டுக்குமிடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படுகிற பெரும்பாலான சமயங்களில் நெல்லிக்காய் ஓர் அடிப்படை மருந்தாகவே இருக்கிறது. இன்றைக்கு இந்திய மருத்துவ தாவரங்களில் பெரிதாக ஆய்வு செய்யப்பட்டு நம்முடைய பழைய நூல்களில் சொன்ன கருத்துக்கள் எல்லாம் மருத்துவ பயன்பாடுகள் எல்லாம் குறிப்புகள் எல்லாம் உண்மை என்பதனை இந்த ஆய்வுகள் நிலைநிறுத்துகிறது.
நெல்லிக்காயை இஞ்சியுடன் சேர்ந்து துருவி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். ஏகாதசி விரதம் இருந்தவர்கள் மறுநாள் சாப்பிடுகிற உணவில் நெல்லிக்காய் சேர்த்தால் அது பசியை நன்றாகத் தூண்டி செரிமானத்தை அதிகப்படுத்தும். நன்றாக உணவை உட்கொண்டு, அதன் சத்துக்களைப் பிரித்து உடலுக்குள் கிரகிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
நெல்லிக்காயில் இருக்கிற ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை, அதில் இருக்கிற துவர்ப்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் குணத்தினால் புற்றுநோய் வராமல் தடுக்கும் திறனும் நெல்லிக்காய்க்கு உண்டு. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் மீண்டும் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் நெல்லிக்காய் மருந்து மிகவும் பயனுடையதாக இருக்கிறது. மேலும் நீரில் உள்ள கடினத் தன்மையை போக்கும் பண்பு நெல்லி மரத்தின் கட்டைக்கு உண்டு. நீரை தெளிய வைக்கும். இந்த தண்ணீருக்குச் சிறுநீரக கல் வராமல் தடுக்கும் ஆற்றலும் உண்டு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...