Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் அநீதி - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை  போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகளில் ஒரு லட்சத்து 47,594 பேர் கலந்து கொண்டனர். அத்தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அவர்களில் ஒவ்வொரு பணியிடத்திற்கு இருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடைபெற்று முடிந்த நிலையில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், விலங்கியல், புவியியல்  உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் கடந்த 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 7 பாடங்களுக்கு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேதியியல், அரசியல் அறிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவற்றில் 121 பின்னடைவு பணியிடங்கள் தவிர மீதமுள்ள 235 பேர் 69% இட ஒதுக்கீட்டு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


121 பின்னடைவு பணியிடங்களைப் பொருத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 74, பட்டியல் இனத்தவர் 35, அருந்ததியர் 10, பொதுப்பிரிவு ஊனமுற்றோர் 2 என்ற விகிதத்தில் நிரப்பப்பட வேண்டும். அதுதான் சமூக நீதிக்கு ஏற்றதாக அமையும். ஆனால், காலியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படவில்லை.

மாறாக, 356 பணியிடங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.நடப்புப் பணியிடங்களுக்கு முதலிலும், பின்னடைவு பணியிடங்களுக்கு இரண்டாவதாகவும் தரவரிசை  தயாரிக்கப்பட்டிருந்தால், 215 நடப்பு காலியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டின்படி 43 இடங்கள், பின்னடைவு பணியிடங்கள் 74 என 117 இடங்கள் இயல்பாக கிடைத்திருக்கும்.

இதுதவிர நடப்பு காலியிடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பொதுப்பிரிவினருக்கான 31% இடங்களான 67 இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேர் இடம் பெற்றிருப்பதால், அவர்களையும் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 151 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு செய்யப்படாதது மட்டுமின்றி, திட்டமிட்டு இழைக்கப்பட்ட இரு துரோகங்கள் தான் சமூகநீதிக்கு பெரும் தீங்கை இழைத்திருக்கிறது


. முதலாவதாக நடப்பு காலியிடங்கள், பின்னடைவு பணியிடங்கள் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது, அப்பட்டியலிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பொதுப்பட்டியலில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது ஆகியவை தான் அந்த இரு துரோகங்கள் ஆகும். 150 மதிப்பெண்களுக்கு 109 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மாணவர் ஏ. வசந்தகுமாரும், 108 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்த ஏ.சங்கரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்;

 ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 91 மதிப்பெண் எடுத்து  103 இடத்தைப் பிடித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவி பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சமூகநீதியையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் இதை விட மோசமாக யாராலும் சிதைக்க முடியாது.தரவரிசைப் பட்டியலில் 93 மதிப்பெண்களுடன் 64-ஆவது இடத்தைப் பிடித்த அன்புவதன் வரையிலான  மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 34 பேர் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் அப்பிரிவைச் சேர்ந்த மேலும் 34 மாணவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். அதேபோல், தரவரிசைப் பட்டியலில் 93 மதிப்பெண்களுடன் 67-ஆவது இடத்தைப் பிடித்த எல்.சுமிதா  வரையிலான பட்டியலின மாணவ, மாணவியர் 5 பேர் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால் அப்பிரிவைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கும். தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொதுப்பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்;


பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட்ட பிறகே அவர்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பல முறை தீர்ப்பளித்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய 34  மிகவும் பிற்படுத்தப்பட்டோரையும், 5 பட்டியலினத்தவரையும் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது அநீதியாகும்.சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகள் தான் இந்தத் துரோகத்தை செய்திருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் நடப்பு காலியிடங்களுக்கும், பின்னடைவு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் தயாரித்தும்,  அதில் முதல் 67 இடங்களுக்குள் வந்துள்ள 34 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பட்டியலினத்தைச் சேர்ந்த ஐவரையும் பொதுப்பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அப்பிரிவுகளைச் சேர்ந்த அதே எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, இன்னும் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் இதே போன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால், அப்பட்டியல்களையும் சரிபார்த்து வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வவாறு அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive