சென்னை: அரபிக் கடலில் ஏற்பட்ட இரண்டு புயல்களால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், மழையின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. 'இன்னும் ஒரு
வாரத்துக்கு, கன மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில், தண்ணீர் பஞ்சம்
தலைவிரித்தாடியது. இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு பரவலாக
பெய்ததால், வட மாவட்டங்களின் தண்ணீர் தட்டுப்பாடுக்கு தற்காலிக தீர்வு
ஏற்பட்டது. வட கிழக்கு பருவ மழை அக்., 16ல் துவங்கியது. 2018ல் பொய்த்தது
போல் அல்லாமல், இந்த ஆண்டு, வட மாவட்டங்களில் பரவலாக பருவ மழை பெய்யும் என,
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தென் மாவட்டங்களிலும், கேரளாவை ஒட்டிய மாவட்டங்களிலும் பருவ மழை
பெய்துள்ளது. மேலும், அரபிக் கடலில் உருவான, 'கியார்' புயல் மற்றும் அதை
தொடர்ந்து உருவான, 'மஹா' புயல் காரணமாக, காற்றின் ஈரப்பதம், தமிழக
பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டு உள்ளது. இந்த புயலால், தமிழகத்திற்கு
இயல்பாக கிடைக்க வேண்டிய மழை கிடைக்கவில்லை; வறட்சியான சூழல்
ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில்
தமிழகத்தில் அதிகபட்சமாக, செங்கோட்டையில், 8 செ.மீ., மழை பதிவானது.
வரும் நாட்களை பொறுத்தவரை, 'சில இடங்களில் வெப்பச் சலன மழை மற்றும் இடி,
மின்னலுடன் திடீர் மழை பெய்யலாம். பெரும்பாலான இடங்களில் வறட்சியான சூழலே
நிலவும். ஒரு வாரத்துக்கு கன மழை கிடையாது' என, வானிலை ஆய்வுகள்
தெரிவித்துள்ளன. புதிய காற்றழுத்தம் வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகும் என, கணிக்கப் பட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தமிழகம்,
புதுச்சேரிக்கு வராமல், வடகிழக்கு மாநிலங்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.
அதனால், தமிழகத்தில் திடீர் மழை மட்டுமே பெய்யும் என, சென்னை வானிலை மையம்
கூறியுள்ளது.
மேலும், அரபிக் கடலில் சுழலும் மஹா புயல், குஜராத்தில் நாளை, கரையை கடக்க
வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடந்த பின் ஏற்படும் வானிலை மாற்றத்துக்கு
ஏற்ப, தமிழகத்துக்கு மழைக்கான சூழல் உருவாகும் என, வானிலை ஆய்வு மைய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...