சமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவிகள்
பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதைப் பெற்றோர்களை வரவழைத்து ஆசிரியர்
கண்டித்ததால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு செய்தி வெளியானது.
இப்படிப்பட்ட துன்ப நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் மீதான பார்வை
மேலும் மோசமாகிவருகிறது. கல்வி நலன், அரசுப் பள்ளிகள் நலன், மாணவர்களின்
எதிர்கால நலன் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆசிரியர்கள் மீது மட்டும்
எல்லாப் பொறுப்புகளும் பொதுமக்களால் திணிக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட
பல விமர்சனங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், கல்வி மேம்பாட்டுக்
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சு.மூர்த்தி.‘‘தற்போது கல்வித்துறையில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் ஆசிரியர்களை
மையப்படுத்தியே நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துதல்,
ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்துதல்,
ஆசிரியர்கள் சொத்துகளைப் பதிவேட்டில் பதிவு செய்தல், ஆசிரியர் பணி மாறுதல்
விதிகளை மாற்றுதல், ஆசியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்
படிக்கிறார்களா? என்பதைப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை இதற்கு
உதாரணமாகக் கூறலாம்.இன்றைய கல்வி முறையில் ஆசிரியர்களின் நிலை என்ன? கல்வித்தரத்தை
உயர்த்துவதில் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்ன? எது தரமான கல்வி?
என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே கல்வி குறித்து அனைவரும்
பேசிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில், ஆசிரியர்களே கல்வியின்
அச்சாணியாக இருக்கிறார்கள் என்று எல்லோரும் கூறுகிறோம். அரசுப் பள்ளிகளின்
கல்வித்தரத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர்களாகவும்
பார்க்கப்படுகின்றனர். கல்விக் கொள்கைகளை முடிவெடுத்தல், கல்விக்கான நிதி
வழங்குதல், கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் வடிவமைத்தல், கல்வியில்
மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல் போன்ற முக்கியமான கல்விச் செயல்பாடுகளில்
ஆசிரியர்களின் பங்கு மிகக் குறைவானது. இவற்றில் ஆசிரியர்களின் பங்கே
இல்லை என்று கூடக் கூறலாம். ஆனால், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தைப்
பற்றிப் பேசும்போது எல்லோரும் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான
குற்றங்களையும் குறைகளையும் சொல்வதைத்தான் பார்க்கிறோம். பாராட்டுகள் மிகக்
குறைவாகவே உள்ளன. அரசுப் பள்ளிகளின் குறைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே
அதிகமாகப் பொறுப்பாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆசிரியர் சமூகமே
பதில் சொல்லவேண்டிய நிலை உள்ளது.உண்மையில் ஆசிரியர்களின் செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதைப் பலர்
புரிந்துகொள்வதில்லை. ஆசிரியர்கள் மட்டுமே கல்வித்தரத்தைக் காப்பாற்றும்
சர்வ வல்லமை படைத்த பிரம்மாக்கள் அல்ல. வகுப்பறையில் மாணவர்கள் மது
அருந்தும் மிகவும் வேதனையான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும்
நடக்கின்றன. பதின்பருவப் பள்ளிக் குழந்தைகள் சீரழிவுக்கு ஆளாவதைத்
தடுப்பதறியாமல் ஆசிரியர்கள் திகைத்துக் கொண்டுள்ளனர். மாணவர்களை போதை,
பாலியல் போன்ற சீரழிவுகளுக்கு ஆளாக்கும் பல காரணிகள் பள்ளிகளுக்கு வெளியில்
உள்ளன. பள்ளிக்கு வெளியில் ஆரோக்கியமான பண்பாடு, பழக்கவழக்கம் நிலவினால்
மட்டுமே பள்ளிகள் ஆரோக்கியமாக விளங்க முடியும். எனவே, பள்ளிகளுக்கு
வெளியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும்
எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக ஆள்பவர்களுக்கு உள்ளது. அதற்கு முதல்
படியாக டாஸ்மாக் கடைகளையும் பார்களையும் மூடவேண்டும்’’ என்று மாணவர்கள்
தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழலைப் பட்டியலிட்டார்.மேலும் தொடர்ந்தவர், ‘‘இன்றைக்கு சமூகத்தில் அடித்தட்டு நிலையிலுள்ள
குடும்பங்களைச் சார்ந்தவர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
படிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இப்பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளே எளிதில்
நடத்தைச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். மதுக்கடைகளும், பாலியல் மற்றும்
வன்முறை உணர்வு களைத் தூண்டும் ஊடகங்களும் இல்லாமல் இருந்தால்
இக்குழந்தைகள் நடத்தைச் சிக்கலுக்கு ஆளாவது குறையும். ஆனால், இதுபோன்ற
குறைகளுக்கும் ஆசிரியர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். அரசுப் பள்ளிச்
சூழலை எவ்வளவு சிறப்பாக வைத்திருந்தாலும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள்
ஒழுக்கமற்றவர்கள், தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என்ற தவறான
கருத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு
ஏழைகள் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது. உண்மையில்
வசதிபடைத்தவர்களின் நலன்களுக்காக ஏழைகள் பலியாக்கப்படுகிறார்கள். இன்றைய
சமூகத்தில் லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் உருவாக ஏழைகள் காரணமல்ல.
அதைப்போல அரசுப் பள்ளிகள் தாழ்வுபட ஏழைகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும்
காரணமல்ல.’’ என்கிறார்.
‘‘ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) மூலம் ஒவ்வொரு
ஆண்டும் அக்டோபர் 05 ஆம் நாள் உலக ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டுக்கு ஆற்றும் கடமைக்காக ஆசிரியர்களை
நன்றியுணர்வோடு போற்றும் நாளாக இந்நாள் உள்ளது. “சுதந்திரமாகக்
கற்பிப்போம் ஆசிரியத்தை மேம்படுத்துவோம்” என்ற பொருளில் கடந்த ஆண்டு உலக
ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் சமூக முக்கியத்துவத்தை
உணர்த்தும் வகையிலும் பொதுக்கல்விக்காக அல்லது பல்வேறு துறைகளில் சிறப்பான
பங்களிப்புச் செய்தமைக்காக இந்நாளில் ஆசிரியர்களுக்கு
மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் ஆசிரியர் நாள் இப்படிப்பட்ட
உயர்வான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதில்லை. ஆசிரியர்களை விருதுக்கு
தேர்வு செய்வதில் கூட நியாயமான வழிமுறைகள் இல்லை. இச்சூழல் மாறவேண்டும்.
ஜனநாயகத்திற்கும் கல்விக்குமான தொடர்பை அமெரிக்க நாட்டின் கல்வியாளர் ஜான்
டூயி “ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகம் புதிதாகப் பிறக்க வேண்டும், கல்வியே
அதன் மருத்துவச்சி’’ என்று மிக அழகாகச் சொல்கிறார். கல்விப் பணியாற்றும்
ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும் மிக உயர்வானது. நம்முடைய நாட்டிலும்
கல்வி முறையும் ஆசிரியர்கள் உருவாக்கமும் இவ்வுயரிய குறிக்கோளை
அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். இதற்கான மாற்றங்களைச் செய்யாமல்
எதிர்காலத் தலைமுறையில் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியாது’’ என்ற
ஆதங்கத்தோடு பேசி முடித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...