மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மாரடைப்பும் இருக்கிறது. உலகம் முழுவதும் இதய பாதிப்பால் உயிரிழப்போரின் சதவிகிதம் அதிகரித்தபடியே உள்ளது. பெரும்பான்மையான மரணங்கள் முதல் மாரடைப்பிலேயே நிகழ்ந்துவிடுகின்றன என்பதுதான் சோகம். மாரடைப்பு குறித்த சந்தேகங்கள் பலருக்கு உண்டு. `நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் வேறுபாடு என்ன' என்பது, அவற்றில் முக்கியமானது.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இதயநோய் நிபுணராக சேவையாற்றிவரும் டாக்டர் வி.சொக்கலிங்கம், மேற்கண்ட கேள்விக்கு பதிலளிக்கிறார்.
உலகத்தில் உயிர்க்கொல்லி நோய்கள் மூன்றுதான். மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் விபத்துகள். இவை மூன்றும்தான் உலக மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவை மூன்றுமே வாழ்க்கைமுறை நோய்கள். எதிர்மறை எண்ணங்களாலும் எதிர்மறை வாழ்க்கைமுறையாலும் ஏற்படக்கூடியவை. ஒவ்வொருவரும் மனம் வைத்தால் இந்த மூன்றிலிருந்தும் விடைபெற முடியும்.
நெஞ்சுவலிக்கும் மாரடைப்புக்கும் என்னங்க வித்தியாசம்?' என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. மார்பில் அடைப்பு போன்று இருப்பதால்தான் அதற்கு மாரடைப்பு என்று பெயர். நெஞ்சுக்குள் இருப்பது இதயம். அந்த இதயத்தில் ஏற்படும் நோயால் வருவதே நெஞ்சுவலி. உடலின் இடது பாகத்தில் எலும்புக்கூட்டின் உள்ளே உள்ளது இதயம். எப்போதெல்லாம் இதயத் தசைகளுக்குச் செல்ல வேண்டிய பிராண வாயு குறைகிறதோ அதுதான் மாரடைப்பு.
இது ஏற்படும்போது அதிக எடையுள்ள கல்லைத் தூக்கி வைத்ததுபோல இருக்கும். இந்த வலி இடது தோள்பட்டை வரையிலும் சில நேரங்களில் இடது சுண்டுவிரல் வரையிலும் நீடிக்கும். சிலருக்கு வலது தோள்பட்டை, கழுத்து, முதுகு, வயிறு போன்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.
இந்த அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படும்போது தசைவலி, மூட்டுவலி, வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை என்று நினைத்து விட்டுவிட்டால் அது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். மேற்கண்ட எந்த அறிகுறியாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் எடுத்துக்கூறும்போது அவர்தான் அது மாரடைப்பா அல்லது வேறு வகையான பிரச்னையா என்பதைக் கண்டறிந்து சொல்வார்.
மாரடைப்போ, நெஞ்சுவலியோ ஒருவருக்கு ஏற்படும்போது வியர்வை முக்கியமான அறிகுறியாக இருக்கும். படபடப்பாக இருக்கும், சோர்வாகவும் காணப்படுவார்கள். நூற்றில் 95 பேருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் இந்த வலியை உணராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு 5% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக் (Silent heart attack)' வர வாய்ப்பு உண்டு.
சர்க்கரைநோயோடு புகை, மது பழக்கம் உள்ளவராக இருந்து வயது 80 ஆக இருந்தால் அவருக்கு 40% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இசிஜி (Electrocardiography) எடுத்துப் பார்ப்பது அவசியம்!" என்கிறார் வி.சொக்கலிங்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...