Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா? தவறா?



வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது' என்று நாம் மிகவும் சாதாரணமாகக் கூறினாலும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி சவாலானது என்பது நிதர்சனமான உண்மை.

சுயநலமின்றி பொறுமை, அர்ப்பணிப்பு, கடமையுணர்வுடன் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும், இந்த உலகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், பள்ளிகளில் ஜாதிப் பிரச்னைகள் ஒருபுறம் தலைதூக்கி இருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் நிலைமை படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வு குறைந்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரும் ஆபத்தாகவே இருக்கப்போகிறது.

ஒரு குழந்தை பிறந்து 2 அல்லது 3 வயதில் இருந்தே அந்தக் குழந்தையின் பள்ளி வாழ்க்கை தொடங்குகிறது. அனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டிய அந்த வயதில் பெற்றோர்களிடம் செலவழிக்கும் நேரத்தை விட குழந்தைகள் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் செலவழிக்கின்றனர். குழந்தைக்கு கல்வியோடு ஒழுக்கம், பண்பு, வாழ்க்கை நடைமுறைகள் என அனைத்தையும் கற்றுத் தருகின்றனர் ஆசிரியர்கள். அவ்வாறு கற்றுத்தரும் போது மாணவர்கள் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்துத் திருத்தும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. பள்ளிகளில் தன் வகுப்பு குழந்தைகளை ' என்னோட பசங்க' என்று ஆசிரியர்கள் பல இடங்களில் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?


முன்னதாக, தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், 'என் பையன் சொல்ற பேச்ச கேட்கலைன்னா அடிச்சு படிக்க வைங்க' என பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கூறுவர். ஆசிரியர்களும் முதலில் வார்த்தைகளால் சொல்லி புரிய வைப்பார்கள். தொடர்ந்து கேட்காத பட்சத்திலே மாணவர்களை அடிப்பதுண்டு. இன்றும் வளர்ந்த மாணவர்கள் பலர் கூறும்போது, 'என்னை எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடித்து வளர்த்ததால் தான் இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறேன்' என்று கூறுவதை நாம் பார்த்திருப்போம்.

இந்த சூழ்நிலையில் தற்போது ஆசிரியர்கள், மாணவர்களை அடித்தால் உடனே அதனை பெற்றோர்கள் பூதாகரமாக்கி, ஊடங்கங்களில் செய்தி வெளிவரும் அளவுக்கு பெரிதாக்குகின்றனர். இதில், ஆசிரியர்களின் புகைப்படத்தையும் பதிவிட்டு அவர்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். தற்போதைய நவீன காலகட்டத்தில் குழந்தைகளுடன் முறையாக நேரம் செலவழிக்காத பெற்றோர்கள், ஆசிரியர்களை குறைகூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

சமீபத்தில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியயையாக பணியாற்றி வருபவர் சிவகாமி. இவர், காலாண்டுத்தேர்வில் கணிதப் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை பிரம்பால் அடித்துள்ளார். இதில், 24 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தது தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.



ஆசிரியர்கள் என்பவர் தாய்- தந்தையருக்குச் சமமானவர்கள். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, மாணவர்களை நல்வழிப்படுத்த உழைக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலோனோர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதன் மூலமாக, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.

ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே அந்தப் பணியின் மகத்துவம் குறித்து தெரியாமல் மாணவர்களிடம் கண்மூடித்தனமாக நடந்துகொள்கின்றனர். அவ்வாறு நடக்கும் சமயங்களில் பெற்றோர்கள் முறையாக அதனை கையாள வேண்டும். சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் அதுகுறித்து பேசி பள்ளி வளாகத்திற்குள்ளேயே அந்த பிரச்னையை முடிப்பது நலம். மாறாக, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்வது, ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது எல்லாம் தவறான செயல். எதிர்காலத்தில் அந்த ஆசிரியரும் மாணவரும் சந்திக்கும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்லுவதால் எந்தப் பயனும் இல்லை.. 1980, 90களில் இருந்த சமூகத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கும், சின்ஹட்ட நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்று 3 வயது குழந்தைக்கு செல்போனை உபயோகிப்பது எப்படி என்று தெரிந்து வைத்திருக்கிறது. இதற்கு காரணம் யார்? ஒரு பக்கம் தொழில்நுட்பம் வளர்ந்தால் கூட, மோசமான ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும்.


ஆசிரியர்களுக்கு பணிவிடைகள் செய்து கல்வியை கற்றுக்கொண்ட காலம் மாறி, இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் கிண்டல் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வருங்காலத்தில் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கும் குழந்தைகளை நாம் அபூர்வமாக பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. மாணவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களாலேயே மிரட்டப்படுகின்றனர். இதற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

குழந்தைகளை அடித்தால் பெற்றோர்களும் கேள்வி எழுப்புவதால், ஒரு சில ஆசிரியர்கள், 'நமக்கு எதுக்கு வம்பு' என்று பாடம் சொல்லிக்கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக்கொள்கின்றனர். ஆசிரியர்களை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டுவந்து விட்டது யார்? ஆசிரியர்கள் இப்படிச் செய்வதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக அந்தக் குழந்தையின் எதிர்காலம் தான் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள்?

பல்வேறு பிரச்னைகளைத் தாண்டியே ஒரு ஆசிரியர், தனது பணியைச் செய்து வருகிறார் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.


அரசுப்பள்ளியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஒரு ஆசிரியர் கூறுகிறார். 'இப்பல்லாம் எங்க பசங்க சொல்ற பேச்ச கேக்குறாங்க.. அவங்க சொல்றத தான் நாம கேட்க வேண்டியிருக்கு..இல்லனா படிக்க மாட்டேன்னு சொல்றாங்க. கொஞ்சமாவது படிச்சா போதும் னு நாங்களும் அமைதியா போறோம்' என்று வருத்தத்தோடு தெரிவிக்கிறார்.

உங்களது பிள்ளைகள் குறைவான மதிப்பெண் பெற்றால் உறவினர்களிடம் அதைக் கூற பெற்றோர்களாகிய நீங்கள் அவமானமாக நினைக்கிறீர்கள்.. உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலோ, சமூகத்தில் நல்ல மனிதனாக உருமாற வேண்டும் என்றாலோ ஆசிரியர்களுக்கு சில அதிகாரங்களை வழங்கித்தான் ஆக வேண்டும். இன்று பேருந்துகளிலும், ரயில்களிலும் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களைப் பார்த்து கொந்தளிக்கும் இந்த சமூகம் அவர்க்ளின் நடவடிக்கைக்கு ஆசிரியர்களை குறைகூற எந்தத் தகுதியும் இல்லை..


மாணவர்கள் கல்வியோடு வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுகொள்ளத் தானே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்? மாணவன் தவறு செய்தால் அவர்களை எந்த ஒரு வகையிலும் திருத்த ஆசிரியர்களுக்கு உரிமையும், கடமையும், அக்கறையும் பெற்றோர்களை விட அதிகமாகவே இருக்கிறது. பள்ளியில் திருத்தப்படாத மாணவன் வேறு எங்கு திருத்தப்படுவான்? எங்கு திருத்தப்பட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் பிள்ளைகளின் நலன் கருதி சற்று சிந்தியுங்கள் பெற்றோர்களே




1 Comments:

  1. அடிப்பது என்பதும் ஒருவகையான ஆக்கநிலையிறுத்தம்தான். தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்கிற நிலைப்பாடு இருப்பதால்தான் தற்போதைய சமுதாயம் ஓரளவிற்காவது ஒழுங்காக இருக்கிறது. சில மாணவர்கள் அடித்தால் மட்டுமே ஒழுங்கிற்கு வருவார்கள். ஆசிரியர்களும் அதைப் புரிந்துகொண்டு அடிப்பதை கவனமாக நேக்காக கையாள வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive