தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத் திட்டம், இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருப்பதுடன், மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் கல்வி முறையாக இருக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக, மன்னார்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் அணையடியில் உள்ள அவரது இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது அண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: புதியக் கல்விக் கொள்கை திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு, நாடு முழுவதும் அமல்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். இது நிகழ் கல்வியாண்டில் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்கப்பட்டிருக்கிறது. இந்த கல்வி மூலம் மாணவர்களுக்கு 100 சதவீதம் தேர்ச்சி என்ற நிலை ஏற்படும் என்றால், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை கல்வியாளர்கள் மூலம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
கணினி ஆசிரியர்கள் தேர்வு குறித்து ஆசிரியர்கள்தான் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் நீதிமன்றத்தில் அட்வான்ஸ் பெட்டிஷன் போட்டுள்ளது. இந்தியாவே கணினி மையமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளின் பாடத் திட்டமும் வேறாக உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாட நிர்ணயம் என்ற கல்வி முறை இந்தியாவிலேயே முன்மாதிரி கல்வித் திட்டமாக இருக்கும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பாடத் திட்ட முறை மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களின் கற்றல்திறன் ஓராண்டுக்குப் பின் பிரகாசமாக இருப்பது தெரிய வரும். அதோடுமட்டுமன்றி அந்த மாணவர்களின் எதிர் காலத்தை உயர்த்தும் வகையில் பாடத் திட்டம் அமையும் என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
பேட்டியின்போது, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உடனிருந்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...