Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆளைக் கொல்லும் பதாகைகளுக்கு விடைகொடுத்து அப்பாவிப் பள்ளிப் பிள்ளைகளை அரவணையுங்கள்! : விஜய் ரசிகர்களுக்கு அரசுப்பள்ளி ஆசிரியரின் அன்பான வேண்டுகோள்

 
 
எதிர்வரும் தீபாவளி பண்டிகை பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாலும் புதிதாக வெளியாகும் தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களைக் கண்டு களிப்பதும் கொண்டாடி மகிழ்வதும் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் இனிய நிகழ்வாகும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் விஜய் நடிக்கும் பிகில் மற்றும் கார்த்தி நடிக்கும் கைதி ஆகிய திரைப்படங்கள் அவரவர் ரசிகர்கள் கூட்டங்களால் கோலகலமாகக் கொண்டாடிக் களிக்கப்பட இருப்பதை ஆவலுடன் ஏனையோர் காத்துக்கிடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

இந்த மாபெரும் புதுப்படக் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஆளுயர மற்றும் தொலைதூர பதாகைகளும் தட்டிகளும் தலையாய இடம்பிடிப்பது யாவரும் அறிந்ததே. அண்மையில் சென்னையில் பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் பறந்து வந்த பதாகையினால் இன்னுயிர் நீத்த இளம்பெண் சுபஶ்ரீயின் கொடூர மரணத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் வெளிப்படையாகத் தம் தொண்டர்களிடமும் ரசிகப் பட்டாளத்திடமும், பதாகைகள் வைப்பதைத் தவிர்த்துப் பல்வேறு நற்பணிகளில்  நாட்டம் கொள்ள வேண்டுமாய் அன்புக் கட்டளை இட்டதை ஊடகங்கள் வழி அறியவியலும். 

இத்தகு வேண்டுகோளுக்கு இணங்க, இன்னும் ஓரிரு நாட்களில் உற்சாகம் பொங்க கொண்டாடவிருக்கும் தம் மனங்கவர்ந்த நடிகரின் புதிய திரைப்பட வெளியீட்டினை வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ முன்வர வேண்டும். பதாகைகளுக்கும் ஆளுயர அலங்காரத் தட்டிகளுக்கும் ஆகும் பொருள்செலவை ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பட உதவிட வேண்டும். மேலும், தாய், தந்தை மற்றும் இருவரையும் இழந்து புத்தாடைகளுக்கும் பலகாரங்களுக்கும் ஏங்கித் தவிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் நலன் காக்கும் நன்நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தோள்கொடுப்பது என்பது இன்றியமையாதது. 

பொதுவாகவே, எந்தவொரு நடிகரின் ரசிகர்களையும் அத்தகையோர் புத்தம்புது திரைப்பட வெளியீட்டு நாள் அன்று நிகழ்த்தும் முகம்சுளிக்கச் செய்யும் பயங்கர கொண்டாடத்தையும் பொதுமக்கள் எப்போதும் விரும்புவதும் இல்லை. விரும்பியதும் இல்லை. மாறாக, எரிச்சலையும் அருவருப்பையும் கக்கிச் செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஒவ்வொரு ரசிகரின் கடமையாகும். இதுபோன்ற காலங்களில் பல்வேறு நற்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் ரசிகக் கூட்டத்தை வீடும் நாடும் போற்றும் என்பது உண்மை. 

ஆகவே, விஜய் மற்றும் கார்த்தி பட ரசிகர்கள் இந்த தீபாவளிப் பண்டிகையை நல்ல, பயனுள்ள வகையில் கொண்டாடி மகிழ்வித்து மகிழ, எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாடிக் கிடக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பண்டிகைக் காலத்தில் மட்டுமல்லாமல் எல்லாக் காலத்திலும் நல்ல, பாதுகாப்பான உடைகளுக்கு ஏங்கித் தவிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் தங்களால் முடிந்த அளவிற்கு உதவி புரிந்து முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்பது எல்லோரது பெருவிருப்பமாகும். தாங்கள் போற்றும் மக்கள் மனம் கவர்ந்த நடிகருக்கு இதுபோன்ற செம்மைப்பணிகளே உண்மையான மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும். வெள்ளித்திரையில் ஒளிரும் நட்சத்திரம் மற்றும் அவர்களது மெய்யான சமூகப் பணி மேற்கொள்ளும் ரசிகர்கள் படையினை உலகம் மெச்சும்! வீணாகப் போகும், அப்பாவி உயிரைப் போக்கும் பதாகைகளுக்கு விடைகொடுத்து நாதியற்றுக் கிடக்கும் பள்ளிப் பிள்ளைகளை அன்புத் தம்பிகளே வாரியணைத்து விரைந்து உதவிட வாருங்கள்! நிச்சயம் உங்கள் தளபதி விஜய் உங்களுக்காக உற்சாத்துடன் உரத்து அடிப்பார் பிகில்!

முனைவர் மணி கணேசன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive