காலை உணவுத்திட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, ஏழை மாணவர்களின் காலைப்பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார், துபாயில் வசிக்கும் தமிழர் ஒருவர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, மேலக்குட்டப்பட்டி. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். இந்தக் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் 100 நாள் வேலைக்கும், கரூரில் இயங்கிவரும் பல்வேறு டெக்ஸ்டைல்ஸ்களுக்கும் கூலி ஆள்களாகப் போய் வேலைபார்ப்பவர்கள். இவர்களின் பிள்ளைகள் அனைவரும் இந்தத் தொடக்கப்பள்ளியில்தான் படித்துவருகிறார்கள். ஆனால், அவர்களின் பெற்றோர்கள் அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்பும் சூழல் ஏற்பட்டதால், தங்கள் பிள்ளைகளுக்குக் காலை உணவைச் சரிவர வழங்கமுடியாத சூழல் இருந்துவந்தது. காலை உணவு இல்லாமல் தவித்த பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தபிறகு மயங்கிவிழுவதும், படிப்பைவிடும் சூழலில் சிக்குவதுமாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழகம் முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவரும் துபாயில் வசிக்கும் தமிழரான ரவி சொக்கலிங்கம் என்பவரிடம், தங்கள் பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையை, அந்தப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியையான பிருந்தா தெரிவித்திருக்கிறார்.
உடனே ரவி சொக்கலிங்கம், மேலக்குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களின் காலைப்பசியைப் போக்க, காலை உணவுத்திட்டத்தை தனது செலவில் செய்து, மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவரான ரவி சொக்கலிங்கம், பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருந்தார். பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த பதினைந்து வருடங்களாக துபாயில் கட்டடப் பொறியாளராக இருந்துவருகிறார். பத்து வருடங்களாக, தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில்தான், மேலக்குட்டப்பட்டி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
மேலக்குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை பிருந்தாவிடம் பேசினோம். ``எங்க பள்ளி மாணவர்கள் காலை உணவு சாப்பிடமுடியாத சூழல் இருந்ததை சார்கிட்ட (ரவி சொக்கலிங்கம்) சொன்னேன். உடனே அவர், முளைக்கட்டிய தானியங்கள், பச்சைப்பயறு, பொட்டுக்கடலை உருண்டை, எள்ளு உருண்டை, கம்பு உருண்டை, ராகி லட்டு, வேகவைத்த சுண்டல், பட்டாணி மசாலானு தனது செலவுல வாரம் ரெண்டு நாள்கள் வழங்குகிறார். ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து, ரெண்டு நாள் ரவி சார் போடும் காலை உணவுத்திட்டத்தை வாரத்துல அஞ்சு நாள்களும் போடுறோம்
மாணவர்களுடன் ஆசிரியை பிருந்தா
அடுத்தடுத்து, இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பா செய்றதா ரவி சார் சொல்லியிருக்கிறார். காலை உணவுத்திட்டத்தில் உணவு உட்கொள்ளும் மாணவர்கள் முன்புபோல் சோர்வா இல்லாம, இப்போ திடமா இருந்து ஆர்வமா பாடத்தைக் கவனிக்குறாங்க. இங்க மட்டுமில்ல, தமிழகத்தில் இதுபோல பின்தங்கிய நிலையில் உள்ள 40 அரசுப் பள்ளிகளில், இப்படி தனது செலவில் காலை உணவுத்திட்டத்தை நிறைவேத்திக்கிட்டு இருக்கார். அவருக்கு நாங்க வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக!.
துபாயில் உள்ள ரவி சொக்கலிங்கத்திடம் பேசினோம். ``மனிதர்களுக்கு எது கிடைக்குதோ, இல்லையோ.... கண்டிப்பாக நல்ல கல்வி கிடைக்கணும். நல்ல கல்வி கிடைச்சா, வறுமைக்கோட்டுக்குக்கீழே இருக்கும் குடும்பங்கள் முன்னேறும். நல்ல கல்வி கிடைத்தால், தவறுகள் பண்ண தோணாது. இப்படிக் கல்வியால் மனிதர்களுக்குக் கிடைக்கும் நல்ல விஷயங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். இதை நன்றாக உணர்ந்த காமராஜர் தனது ஆட்சியில் நிறைய பள்ளிகளைத் திறந்து, அனைவருக்கும் கல்விக்கண்ணைத் திறக்கக் காரணமாக இருந்தார்.
ரவி சொக்கலிங்கம் (துபாய் வாழ் தமிழர்)
மதிய உணவுக்கு வழிசெய்து, அனைவரிடமும் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தினார். அதனால், அந்தக் கல்வியை எந்தக் காரணத்துக்காகவும் கற்க யாரும் தயங்கக்கூடாதுனு நினைச்சேன். அதனால், என்னாலான உதவிகளை, வருமானத்தில் ஒரு தொகையை ஒதுக்கி தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் செய்துகிட்டு வருகிறேன். அதோட அடுத்த முயற்சியாதான், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம். இந்தத் திட்டம் நல்ல பலனைக் கொடுத்திருக்கு. அடுத்து, இதை இன்னும் விரிவுபடுத்தலாம்னு இருக்கேன்" என்றார்.
வாழ்த்துகள் சார்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...