டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த க.செல்வமணி, லோ.ராஜராஜன், கே.சுரேந்தர், கர்ணா, கணேஷன் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளை ஒன்றாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. மேலும், அந்த தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இதில் முதல்நிலை தேர்வில் மொழிப்பாடம் என்பது நீக்கப்பட்டு, பொது அறிவு பாடமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
அதேபோல், முதன்மை தேர்வில் பகுதி ‘அ’ பிரிவில் மொழிபெயர்ப்பு பகுதி உள்ளது. இதை எங்களால் உடனடியாக செய்துவிட முடியாது. தமிழ் வழி கல்வியில் படித்த எங்களை போன்ற மாணவர்களுக்கு அது மிகவும் கடினம். பகுதி ‘ஆ’ பிரிவிலும் தமிழ் குறித்த வினாக்கள் இருந்தாலும் அதை ஆங்கிலத்தில் எழுதி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த திட்டம் முழுக்க முழுக்க தமிழை அழித்து ஆங்கிலத்தை திணிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விளக்கம் அளித்து இருப்பது வெறும் பிம்பம்.
பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி. நம்முடைய தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அப்படி முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் அவர்கள், மொழிபெயர்ப்பு பகுதியை நீக்கிவிட்டு, அதில் தமிழ் தொடர்பான கட்டாய பாடத்தை கொண்டு வரட்டுமே?.
நாங்கள் இவ்வளவு காலமாக தேர்வுக்கு தயாராகி வந்தது வீணாகிவிட்டது. எங்கள் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுவிட்டது. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த நடவடிக்கை எங்களை போன்றவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது எட்டா கனியாகிவிடும் போல் இருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய பாடத்திட்டத்தினால் தமிழ் அறிஞர்கள், தமிழ் பற்றிய வரலாறு இளைஞர்களுக்கு தெரியாமல் போய்விடும். நாங்களே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும்போது தான் தமிழ் வரலாறு பற்றியும், தமிழ் அறிஞர்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம். எனவே குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும்.
இதுகுறித்து வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளது. அது சாதகமாக வராத பட்சத்தில் அதனைத் தொடர்ந்து அறவழி போராட்டம் நடத்துவோம். தேவைப்பட்டால், இந்த வேலைவாய்ப்பு பிரச்சினைக்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல கையில் எடுப்போம். அதற்கிடையில் முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முடிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...