மக்காத பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு அதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் இல்லா வளாகத்தை உருவாக்கும் வகையில், உணவகம், பிற கடைகள் என கல்வி நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது,
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மக்காத பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் கொண்டு வருவதற்கும் தடை விதிப்பதோடு, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மேற்கொள்ளவேண்டும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் மூலம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என யுஜிசி வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...