தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை எனவும், போட்டித் தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இப்போது நடத்தப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரை சேர்ந்த மதன்குமார் தாக்கல் செய்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், தடய அறிவியல் பிரிவு உதவி ஆய்வாளர் பதவிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்து கொண்டு, 62.30 மதிப்பெண் பெற்றேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 63.30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்வில் கணிதம் தொடர்பான சில கேள்விகள் தவறு எனக்கூறி, இந்த தேர்வில் கலந்து கொண்ட அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. இதன்படி என்னுடைய மதிப்பெண் 62.80 ஆக உயர்ந்தது. இதே தேர்வில், 162-ஆவது கேள்வியும் தவறாக உள்ளது. இதுகுறித்து யாரும் வழக்குத் தொடரவில்லை. அதாவது 3 இயக்க எண்களின் எண்ணிக்கை? என கேட்கப்பட்ட கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதே கேள்வியை ஆங்கிலத்தில் 3 டிஜிட் நம்பர் என கேட்கப்பட்டிருந்தது. எனவே, தமிழில் கேட்கப்பட்ட கேள்வி தவறானது. எனவே, இந்த கேள்விக்கு பதில் அளித்த எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கினால், நான் தேர்ச்சிப் பெற்று விடுவேன். இதன் மூலம் உதவி ஆய்வாளர் பணி எனக்கு கிடைக்கும். எனவே, தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.எட்வின் பிராபகர், 3 இலக்க எண்கள் என்பதற்கு பதிலாக 3 இயக்க எண்கள் என தவறாக கேள்வி கேட்டுள்ளதாக கூறி வாதிட்டார்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை. இலக்கத்துக்கும், இயக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்போதெல்லாம், தேர்வு எழுதுபவர்களைக் குழப்ப வேண்டும், பதில் தெரியக்கூடாது என்ற நோக்கத்தில் தான் போட்டித் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நான் சட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றவன். அப்போது அந்த நுழைவு தேர்வு 60 சதவீதம் சட்டம் தொடர்பாகவும் எஞ்சிய 40 சதவீதம், அந்த ஒரு மாத காலத்தில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதை தான் பொதுஅறிவாக அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை வேறு. எனவே, இந்த மனுதாரருக்கு 0.5 மதிப்பெண் வழங்கவேண்டும். கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். அப்போது அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கதிர்வேல், இதுதொடர்பாக தேர்வு வாரியத்தின் கருத்தை கேட்டு கூறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...