உலகின் எந்த நாடும் இதுவரை செல்லாத நிலவின் தென் பகுதிக்குச் செல்வதற்கான சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ நீண்ட நாள்களாகச் செய்துவந்தது. இந்தத் திட்டம் நிறைவடைந்து கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவிலிருந்து 2.1 கி.மீ தூரத்தில் லேண்டர் பயணித்துக் கொண்டிருக்கும்போது திடீரென லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எந்த சிக்னலும் வராததால் விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சி செய்து லேண்டர் பிரச்னையை சரிசெய்ய நினைத்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் சிக்னல் வரவில்லை. இது தொடர்பாக ஆய்வுசெய்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
நேற்று நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக பிரதமர் மோடி இஸ்ரோ மையத்துக்கு நேரில் வருகை தந்திருந்தார். இதே நிகழ்வைப் பார்ப்பதற்காக சில மாணவர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக கடந்த மாதம் உயர் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 60 மாணவர்கள் நேற்று இஸ்ரோ மையத்துக்கு வந்து சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் காட்சிகளை நேரில் பார்வையிட இருந்தனர்.
இந்த நிலையில், இஸ்ரோ வந்திருந்த பிரதமர் மோடி அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஒரு மாணவன், பிரதமரிடம், ``எனக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்பது ஆசை, அதற்காக என்ன செய்ய வேண்டும், எதைப் பின்பற்ற வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதமர் அந்த மாணவனை தட்டிக்கொடுத்தபடி, ``சிறப்பு, ஏன் குடியரசுத் தலைவர்? நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக் கூடாது? எனக் கேட்டவாறு சிரித்து மகிழ்ந்துள்ளார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ``உங்கள் வாழ்க்கையில் பெரிய நோக்கங்களை உருவாக்குங்கள், அதற்கான இலக்குகளைச் சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
இந்தச் சிறிய இலக்குகளை நோக்கி நகர்ந்து சாதித்துக்காட்டுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் இழந்தது, கடந்த காலத்தைப் பற்றி எப்போதும் கவலைப்படாதீர்கள், அதேபோல் ஏமாற்றத்தை உங்களுக்கும் நுழைய விடாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...