Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா? மாணவர்களின் திறன் எப்படி மதிப்பிடப்படுகிறது?

எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன்.

மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன்.

பின்லாந்து கல்வி முறை குறித்து பல நேர்மறையான கருத்துக்களை நாம் பெரிதும் கேட்டிருப்போம். சமீபத்தில் தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆராய அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

செந்தில் கண்ணன் பின்லாந்தில் மாற்றுக் கல்விக்கான தளத்தில் செயலாற்றி வருகிறார். விஜய் அசோகன் தாய்மொழி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் இருவரும் கல்விக்காக கொண்டாடப்படும் பின்லாந்து கல்விமுறை குறித்தும், பள்ளி நுழைவுத் தேர்வுகள் குறித்தும் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

'தேர்வு நடக்கும், ஆனால்...'
பின்லாந்து கல்வி முறை குறித்து பல கட்டுக்கதைகள் இந்தியாவில் உலவுகின்றன. குறிப்பாக இங்குத் தேர்வு இல்லை, ரேங்க் கார்ட் இல்லை என பலர் பல்வேறு விதமாக தங்களுக்கு பிடித்தபடி பேசி வருகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே பாதி உண்மைதான் என்கிறார் செந்தில்கண்ணன்.

பின்லாந்து பள்ளிகளில் தேர்வு நடக்கும். ஆனால், அது மாணவர்களை மதிப்பிடுவது போல இருக்காது. ஒரு மாணவரை இன்னொரு மாணவரோடு ஒப்பிடுவதற்காக இருக்காது. ஒரு மாணவருக்கு என்ன சிறப்பாக வருகிறது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் அறிந்து கொள்வதற்காகவே தேர்வுகள் நடத்தப்படும்.

அதே நேரம், ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மற்ற மாணவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பார்கள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் செந்தில்கண்ணன்.

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - இந்தக் கல்வியாண்டே அமலாகிறது
'கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தர முடியும்?'
செந்தில்கண்ணன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

"பின்லாந்து கல்வி குறித்துப் பேசுபவர்கள் அது ஏதோ அதன் பாடத்திட்டத்தால் அந்நாடு சிறந்து விளங்குகிறது என்று எண்ணுகிறார்கள். இது தவறு. உண்மையில் பின்லாந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அந்நாட்டிற்கு உள்ள சமூக பிரக்ஞைதான். அவர்களுக்கு கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்கிறது" என்கிறார்.

பின்லாந்து கல்விமுறை'
பின்லாந்து கல்வி முறை குறித்து விவரிக்கும் செந்தில் கண்ணன், "பின்லாந்தில் குழந்தைகளுக்கான டேகேர் பள்ளி ஒரு வயதிலேயே தொடங்கிவிடும். இதில் கட்டாயம் சேர்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். அதுபோல இது இலவசமும் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மானியமும் தருகிறது" என்கிறார்.

மேலும் அவர், "டே கேர் என்றவுடன் ஏதோவென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நம் ஊர் பால்வாடி போலத்தான். ஆனால், அதே நேரம் அங்குக் கற்பிக்கும் முறை மற்றும் கற்பிக்கப்படும் விஷயம் நம்மூர் பால்வாடி போல அல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் இருக்கும். அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், சாலை விதிகளை மதிப்பது, தனித்துவத்தை இழக்காமல் சமூகத்துடன் கலந்திருப்பது ஆகியவை போதனையாக அல்லாமல் நடைமுறை பயிற்சியாக கற்பிக்கப்படும்" என்று கூறுகிறார்.

பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்டா?
வேலை வாய்ப்புக்காகவா அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி?
"முறையான பள்ளியானது ஆறு வயதில்தான் அங்கு ஒரு குழந்தைக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வியும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், தயக்கமற்று இருப்பது குறிப்பாக தற்சார்பு வாழ்க்கையை கற்பிப்பதாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள், தனக்கு என்ன தேவை? தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள பின்லாந்து கல்வி முறை வழிவகை செய்கிறது.

நுழைவுத் தேர்வு பின்லாந்து பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், மத்தியிலிருந்து ஒருவர் சொல்லி நடக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு இல்லை. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் அங்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. சில பள்ளிகளே தங்களுக்குத் தேவையான போது, ஏற்றவாறு பாகுபாடு இல்லாமல் நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்" என்று தெரிவிக்கிறார்.

'வாழ்க்கைக்கானது'
சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளதாகக் கூறுகிறார் அங்கு பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த யாசர்.

நம் அன்றாட வாழ்வுக்கு என்ன தேவையோ அதைக் கற்பிக்கிறார்கள். அரசுக்கு மனு எழுதுவது எப்படி?, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது, பருவநிலை மாற்றம் என்றால் என்ன? அது எப்படி நம் சாப்பாட்டுத் தட்டிலேயே தொடங்குகிறது. இவை அனைத்தையும் நடைமுறை பயிற்சியில் தொடக்கப்பள்ளியிலேயே கற்பிக்கிறார்கள். குறிப்பாக வாழ்க்கை குறித்து அவநம்பிக்கையை விதைக்காமல், வாழ்தல் குறித்த நம்பிக்கையையும், சக மனிதர்கள் மீது பாசத்தையும் ஏற்படுத்துவதாக இங்கு கல்வி உள்ளது" என்கிறார்.

'சீனா முதல் அமெரிக்கா வரை'
சீனா முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் பணிநிமித்தமாக தங்கி இருக்கிறேன். எந்த நாடும் மாணவர்களை பள்ளி நோக்கி ஈர்க்க என்னவெல்லாம் செய்யலாமென யோசிக்கிறதே அன்றி அவர்களை பள்ளிக்கு வராமல் தடுப்பதற்காக செயலாற்றவில்லை என்கிறார்.

ஐரோப்பா கல்வியில் சிறந்து விளங்க காரணம். அவர்கள் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தருவதுதான் என்கிறார் விஜய் அசோகன்

மேலும் அவர், "தாய்மொழியில் கல்வி கிடைக்காததால்தான் பலர் பள்ளியைவிட்டு இடைநிற்கிறார்கள் என்கிறது யுனெஸ்கோ. உலகெங்கும் 40 சதவீத மாணவர்களுக்கு குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் தாய் மொழியில் கல்வி கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive