உயர் கல்வி கற்கும் மாணவர்கள் கூட தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத நிலை
தமிழகத்தில் உள்ளது. இந்த அவலத்தை கடலூர் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர்
ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், புவனகிரியில் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிபவர் அம்பேத்கர். இவர், தனது முகநூல் பக்கத்தில், அண்மையில் வெளியான ஒரு புதிய திரைப்படத்தின் பதாகையுடன் மேள,தாளத்துடன் கூச்சலிட்டபடி, அனுமதியின்றி சாலையில் ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கு, கல்லூரி மாணவர்கள் காவல் துறைக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் ஒன்றை கடந்த 21-ஆம் தேதி பதிவேற்றியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், "நான் கீழ்புவனகிரியைச் சேர்ந்த பி.காம். மாணவர். இனிமேல் காவல் துறை அனுமதியின்றி, திரையரங்கில் பேனர் வைக்க மாட்டேன், மீறி செய்தால் சட்ட நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக, ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை, சிவப்பு நிற கோடிட்டு காட்டி, முகநூலில் காவல் ஆய்வாளர் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "மாணவர்களின் கல்வி நிலை இவ்வாறு போனால், யார்தான் காப்பார்கள் இவர்களையும், இவர்களின் தமிழையும்? என கேள்வி எழுப்பியுள்ள காவல் ஆய்வாளர், இதுபோன்ற இளைஞர்களுக்கு சரிவர தமிழைப் போதிக்காமல் விட்ட ஆசிரியர்கள் மீது கோபம் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம், முகநூல் மட்டுமல்லாது கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதேபோல, மேலும் சில மாணவர்கள் எழுத்துப் பிழைகளுடன் எழுதிய மன்னிப்பு கடிதங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...