மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் '10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்' என ஆக. 31ல் அறிவிப்பு வெளியிட்டார்.இதற்கு எதிர்ப்புதெரிவித்து செப். 1ல் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்நடத்தினர்.இதையடுத்து வங்கிகள் இணைப்பு குறித்து அந்தந்த வங்கிகளின் போர்டில் தீர்மானம் நிறைவேறிய போதும் வங்கிகள் முன் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக முழு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.இதுதொடர்பாக மத்திய அரசுடன் நடந்த பேச்சு நேற்று தோல்வி அடைந்ததால் இரண்டு நாள் வேலைநிறுத்தம் உறுதியாகி உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட நான்கு சங்கங்கள் செப். 26, 27ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட 'நோட்டீஸ்' வழங்கின.இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் நிதித்துறை பிரதிநிதிகளுடன் பல முறை பேச்சு நடந்தது. மத்திய அரசின் தொழிலாளர் நல கமிஷனருடன் டில்லியில் நேற்று பேச்சு நடந்தது.
இதுவும் தோல்வியில் முடிந்ததால் இரண்டு நாள் வேலைநிறுத்தம் உறுதியாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வங்கி அதிகாரிகள் ஈடுபடுவர். இதனால் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் பாதிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முடங்கும் நாட்கள்!
வங்கி அதிகாரிகள் 26, 27ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப். 28ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை. 29ல் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.செப். 30ம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் தினம் என்பதால் வாடிக்கையாளர்கள் சேவை கிடையாது. எனவே தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...