ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று
மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது
தற்போது 60 ஆக உள்ளது. மத்திய அரசின் மருத்துவர்கள், கல்லூரி
பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெறும் வயது 65 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மையை சமாளிப்பதற்கு மத்திய அரசு ஊழியர்கள்
ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை
முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 60 வயதை
அடைந்தவர்கள் அல்லது 33 வருட சேவையை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற
வேண்டும். இதில் எது முதலில் வருகிறதோ, அதன்படி ஓய்வைக் கணக்கில் கொள்ள
வேண்டும் என விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு
செய்திருப்பதாக சமூகவலைத்தங்களில் பரவும் தகவலில் கூறப்பட்டிருந்தது
இந்தப் பரிந்துரை தற்போது நிதிக் கணக்கீடுகளுக்காக செலவீனத் துறையின் வசம்
உள்ளது. ஒருவேளை, இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட
அளவிற்கு வேலையின்மை பிரச்னையை இது சரி செய்யும், எனவும்
சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து
விளக்கமளித்துள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சமூகவலைத்தளங்களில்
பரவும் தகவல் வதந்தி என கூறியுள்ளார்.
அதுபோன்ற எந்த முன்மொழிவும் வழங்கப்படவில்லை என்றும், அது தேவையும் இல்லை
என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 30 வருட சேவையை பூர்த்தி
செய்தவர்களுக்கும், சரியாக பணி செய்யாதவர்களுக்கும் 50 அல்லது 55 வயதில்
கட்டாய ஓய்வளிக்கும் வகையில் ஏற்கனவே விதிமுறை உள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். 58 ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது
கடந்த 1998ம் ஆண்டில் 60 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...