"சாதனைகளைப் படைப்பதற்கு நாம் காட்டும் அக்கறையும் ஈடுபாடும், விடாமுயற்சியும் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்" என்று முகமலர்ச்சியுடன் பேசுகிறார் கல்லூரி மாணவியான நந்தினி. திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த இவர், அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலை 2ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் பயின்று வருகிறார்.
சிறுவயது முதலே தமிழ் மீதும், திருக்குறள் மீதும் தீரா காதல் கொண்ட நந்தினி, பல்வேறு பேச்சு மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
சிறிய அளவில் காணப்படும் இவரது வீடு முழுவதும் பதக்கங்களும், கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்களுமே காட்சி அளிக்கின்றன. தமிழ் இலக்கிய விழாக்களில் பங்கேற்று திருக்குறள் தொண்டாளர், திருக்குறள் தூதர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார். பென்சில் ஊக்கில் தமிழ் எழுத்துக்களை செய்வது, சாக்பீசில் விதவிதமான உருவங்களை வடிவமைப்பது போன்ற திறமைகளையும் பெற்றுள்ளார் நந்தினி. மிரர் ரைட்டிங் முறையில் எழுதுவதிலும் கைதேர்ந்தவராக விளங்குகிறார் நந்தினி. தாளின் வலதுபுறத்தில் இருந்து தலைகீழாக எழுதியபின், கண்ணாடி மூலம் பார்த்தால் சரியாக தெரிவது தான் மிரர் ரைட்டிங். கடின பயிற்சியாலும் விடா முயற்சியாலும் 1,330 குறட்பாக்களை மிரர் ரைட்டிங் முறையில் எழுதி புத்தகமாகவும் வெளியிடுள்ளார் நந்தினி.
புதுச்சேரி தமிழ் சங்கமும், புதுச்சேரி அரசும் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. யூனிவர்சல் புக் ஆஃப் அச்சீவர்ஸ், பியூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் அச்சீவர்ஸ், ஜெட்லீ புக் ஆஃப் ரெக்கார்ட் போன்ற நிறுவனங்கள் மாணவி நந்தினிக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளன. அடுத்த கட்டமாக திருக்குறள் புத்தகத்தை, நான்கு திசைகளிலும் எழுத பயிற்சி செய்து வருவதாகக் கூறுகிறார் சாதனை மாணவி நந்தினி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...