ஒத்திவைக்கப்பட்ட 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடித் தேர்வுக்கான புதிய விண்ணப்பத் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) திங்கள்கிழமை முடிவு செய்து அறிவிக்க உள்ளது.
இதற்காக டிஆர்பி தலைவர் தலைமையில், உயர் கல்வித் துறைச் செயலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற உள்ளது.
அறிவிப்பாணை: அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல் என பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வு முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டி.ஆர்.பி. அண்மையில் வெளியிட்டது.
அதில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க பலர் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை டி.ஆர்.பி. வெளியிட்டது. அதில், தொழில்நுட்ப காரணங்களால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்களிடையே எழுந்தது. இதை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள டி.ஆர்.பி. அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடித் தேர்வுக்கு ஆன்-லைன் பதிவு செய்வதற்கான புதிய தேதி, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத்தான், ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்வதற்காக அல்ல. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு நடைமுறையில் எந்தவித மாற்றமும் இருக்காது.
திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அதிகாரிகளும் பங்கேற்பர். இதில் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு, உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...