கல்வித்
தரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க
அனுமதி வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்
என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சிபிஎஸ்இ
பள்ளிகள் மேலாண்மை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில்
புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர்
செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்ந்து
அதிகரித்து வருவதால் கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு புதிதாக திறக்க
அனுமதி வழங்கக் கூடாது என்று சிபிஎஸ்இ சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் பேசி தடையில்லா சான்றிதழ்
வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகளை கொண்டு வரவும், புதிய பள்ளிகளுக்கு
தடையில்லா சான்றிதழ் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இட
ஒதுக்கீடு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து
தனியார் பள்ளிகளிலும் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு
வழங்க வேண்டும். இந்த விதிமுறை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க
வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த இட
ஒதுக்கீட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த
வேண்டும்.
தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2
வகுப்பை முடித்த பின்னர் தனியாக ஓராண்டு தனியார் பயிற்சி மையங்களில்
சிறப்புப் பயிற்சி பெற்று தேர்வெழுதுகின்றனர். இந்த காரணத்தால்தான் அவர்கள்
அதிகமாக தேர்ச்சி பெறுகின்றனர். நிகழாண்டு அரசின் சார்பில் செயல்படும்
இலவச நீட் பயிற்சி மையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள்
இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை ஆசிரியர்களுக்கும் நன்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள்
அதிகளவில் தேர்ச்சி பெறுவர் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...