ஒருங்கிணைந்த கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் 7043 அரசு நடுநிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன்பெறுவர்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கற்பிக்கும் தற்காப்பு பயிற்சியால் தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு, ஆரோக்கியம், நலம் பேணுதல் மற்றும் வலிமையான உடல் ஆகியவற்றை தருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உயர் தொடக்க வகுப்புகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவியர்களையும் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்யும் முன்னர் அப்பகுதியில் தற்காப்பு கலை பயிற்சி கொடுக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்திற்கு இரு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.ஒன்றரை மணி நேரத்தினை சிறப்பு பாட வேளைகளான உடற்கல்வி, வாழ்வியல் திறன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் இணை செயல்பாடுகள் பாட வேளையுடன் இணைந்தவாறு கால ஒதுக்கீடு அளித்திடலாம். கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருத்தல் வேண்டும். நடத்தப்படும் வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு பேரீச்சம் பழம்,பிஸ்கட், கடலைமிட்டாய் வாங்கி கொடுக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தொழில்நுட்ப கல்வி தகுதிகள் கொண்டவர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வேண்டும். தற்காப்பு பயிற்சிக்கு தேவையான குறிப்பாக கராத்தே உடைகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், அரிமா சங்கம் அருகில் உள்ள பெரும் நிறுவனங்களின் உதவியுடன் வாங்கி தரலாம்.
மாணவிகளை தேர்வு செய்யும்போது பல நாள்பட்ட நோய்கள் இருப்பின் தேர்வு செய்ய வேண்டாம். ஆரோக்கியத்துடன் இருக்கும் மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...