குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தவே மதிப்பீடு தேவை. அவர்களைப்
பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. இப்போது அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு
எனும் சொல்லே குழந்தைகளுக்கு அச்சம் தருவதாக இருக்கிறது.
'5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாம்" என்ற தமிழக அரசின் ஆணை கல்வி வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் இது குறித்துத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், "பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்தப் பொதுத்தேர்வு முடிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார். அரசின் இந்த முடிவு குறித்து, கல்வி தொடர்பாகத் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஆசிரியர்களிடம் பேசினேன்.
ஆசிரியரும் கல்விச் செயற்பாட்டாளருமான சுடரொளி, "5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது தேசிய கல்விக் கொள்கையை நடைமுறை படுத்தும் ஒரு பகுதி என்றே பார்க்க முடிகிறது. அந்தக் கொள்கை வரைவு மூலம் இரண்டு விதமான பாதிப்புகள் நிகழும் என நான் நினைக்கிறேன். ஒன்று, இதுமாதியான பொதுத்தேர்வுகள் மூலம், அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை எனும் பிம்பத்தை உருவாக்கி, தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களை நகர்த்திடும், கல்வியை முழுக்க முழுக்கத் தனியார் மயமாக்கிவிடுவது. அடுத்தது, எல்லோரும் உயர்கல்விப் படிக்கலாம் எனும் நிலையை மாற்றி, அதை ஒருசிலருக்கானது என்பதாக்கி, மற்றவர்களைத் தொழிற்கல்வியை நோக்கித் தள்ளுவது. இதன்மூலம் எளிய பொருளாதாரம் கொண்ட அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி மட்டுமே சாத்தியமாகிவிடக்கூடும்.
10-ம் வகுப்புக்கு முன் தேர்வே நடப்பதில்லை எனச் சிலர் நினைப்பது உண்மையல்ல. அனைத்து வகுப்புகளுக்கும் இப்போதும் தேர்வுகள் நடக்கின்றன. ஆனால், அவை அந்தந்தக் கல்வி மாவட்டத்துக்கு ஏற்ப கேள்வித்தாள் அமைக்கப்படும். இப்போது அறிவித்திருக்கும் பொதுத்தேர்வில் மாநில அளவில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான். அப்படியெனில் இந்தப் பொதுத்தேர்வுகள் என்ன செய்யப்போகின்றன. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பதை மாற்றி, ஃபெயிலாக்கப்படுவது நடக்கவிருக்கிறது. தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பதால், 9-ம் வகுப்பில் சற்று குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை ஃபெயிலாக்கிவிடுகிறார்கள். ஏனெனில், 10-ம் வகுப்பில் 100 சதவிகித வெற்றி என்பதைக் காட்டிதான் அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இது ரகசியமான ஒன்றல்ல. அனைவருக்குமே தெரிந்ததுதான். இப்போது எடுத்திருக்கும் முடிவால், 4 மற்றும் 7 -ம் வகுப்பிலும் மாணவர்களைத் தங்க செய்யப்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
கொஞ்சமாவது கல்வி குறித்த விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்களும் கல்வி குறித்த பெரிய விழிப்புணர்வு அற்றவர்களின் பிள்ளைகளும்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்நிலையில், 5-ம் வகுப்பில் ஃபெயிலாகும் மாணவர்களின் கல்வி நிறுத்தப்படும் பெரும் அபாயம் இருக்கிறது. அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுவர்கள் என்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னுடன் படித்த ஒருவர் முதல் ஓரிரு வகுப்பில் ஃபெயிலாகி விட்டார். அவரைச் சமீபத்தில் பார்த்தபோது அதிர்ச்சியும் குற்றவுணர்வும் அடைந்தேன். கல்யாண மண்டத்தில் எச்சில் இலை எடுக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார். நானும்கூட 12-ம் வகுப்பில் ஃபெயிலாகியிருக்கிறேன். என் அப்பா, ஆசிரியர் என்பதால் என்னைத் தேற்றி படிக்க வைத்து ஆசிரியர் பணிக்குச் செல்ல வைத்தார். ஆனால், என்னுடன் படித்த அவர் ஃபெயிலானவர் நிலை என்னவாயிற்று? இடைநிற்றலின் கொடூரத்தை இதைவிட வேறு எப்படிச் சொல்வது.
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்திருக்கும் இதே அமைச்சர்தான் சென்ற ஆண்டில், தமிழகத்தில் 3, 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத்தேர்வு வராது என்று கூறியிருந்தார். மேலும், பெற்றோர்கள் வரவேற்பதாகச் சொல்லியிருப்பது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. பெற்றோரிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஏதும் நடைபெறவில்லையே? ஒருவேளை சில பெற்றோர்களே அப்படிக் கூறினாலும், கல்விச் சூழலைக் கவனத்தில் கண்டு அரசுதானே சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை கைவிடுவதற்குக் கல்வியாளர்கள், பெற்றோர்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டியது அவசியம்" என்கிறார் சுடரொளி.
கல்வி மேம்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான சு. மூர்த்தி, "பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. உலகம் தழுவிய அளவில், குழந்தைகள் கல்வி சார்ந்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. கல்வி பற்றியும் குழந்தை உளவியல் பற்றியும் குழந்தை உடலியல் பற்றியும் புரிதல் இல்லாமல், தேர்வுகளால் முடிவெடுக்கிறார்கள். தேர்வு என்பது குழந்தைகளை மதிப்பீடு செய்வது. குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தவே மதிப்பீடு தேவை. அவர்களைப் பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. இப்போது அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு எனும் சொல்லே குழந்தைகளுக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. ஒரு வகுப்பில் ஒரே மாதிரியான பொருளாதார, குடும்பச் சூழலிலிருந்து குழந்தைகள் வருவதில்லை. பல்வேறு சூழலிலிருந்து வருகிறார்கள். இவர்களைப் பொதுத்தேர்வு என்ற ஒற்றை எழுத்துத் தேர்வு அலகால் மதிப்பிடுவது என்பது கல்வி உளவியலுக்கு மட்டுமல்ல, குழந்தை உளவியலுக்கும் எதிரானது.
எண்ணும் எழுத்தும்தான் தொடக்கப்பள்ளியின் முதன்மையான நோக்கம். மொழித்திறனைக் கற்பிக்கத் தனியாகத் தமிழாசிரியர், அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் கற்பிக்கத் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தால்தான் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் இங்கே இருக்கின்றனவா என்ன? ஆக, குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை முழுமையாக உருவாக்கித் தராமல் பொதுத்தேர்வு வைப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பொதுத் தேர்வு நடத்தினால் ஆசிரியர் சரியாக வேலை செய்வார்கள். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் என்ற எதிர்மறைக் கண்ணோட்டம் கல்வி சார்ந்த கொள்கை முடிவெடுப்பவர்களிடம் உள்ளது. விருப்பத்துடன் குழந்தைகள் கற்பதே மறக்கப்படாமல் இருக்கும்" என்கிறார்.
எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைப்பட்டுவிடாதிருக்க வேண்டும் என்பதே எல்லோரின் வேண்டுகோளும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...