நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச்
சேர்ந்தவர் வசந்தா சித்ரவேல். தொடக்கப்பள்ளி ஆசிரியையான இவர்
மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது புதுமையான முறைகளைக் கையாள்வதுண்டு.
இந்நிலையில், தனது சொந்தப்பணத்தில் ஆயிரம் குடைகளை வாங்கி 15 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இதற்காக 1 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். ஆயக்காரன்புலம் நாடிமுத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்குக் குடைகளை வழங்கிக் கொண்டிருந்த ஆசிரியை வசந்தாவைச் சந்தித்தோம்.
``கடந்த ஆண்டு கஜா புயல் எங்கள் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப் படிப்பினையாகக் கொண்டு நெருங்கி வரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர மழை ஒரு தடையாக இருக்கக் கூடாது என யோசித்தேன். மாணவர்கள் தலையில் பாலித்தீன் பைகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதைப் பார்த்தபோது மனதுக்கு வருத்தமாக இருந்தது. அதனால், 15 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்குக் குடை வழங்கத் திட்டமிட்டு என் சொந்த செலவில் அதைச் செய்தும் முடித்துவிட்டேன். இனி பசங்க ஸ்கூலுக்கு நனைஞ்சுக்கிட்டே வர அவசியம் இல்லை" என்கிறார் பெருமிதமாக.
இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் சிவகுமார் கூறுகையில்,``கற்பித்தல் மற்றும் சமூகப் பணியில் ஈடுபாட்டுடன் தொடர்ந்து செயல்படும் ஆசிரியை வசந்தா, கஜா புயல் பாதிப்பின் போது பல லட்ச ரூபாய் செலவு செய்து இந்தப் பகுதி மக்களுக்கு உதவினார். இப்போது 1,000 குடைகளைக் கொடையாக வழங்கியுள்ளார். தம்மால் இயன்ற வரை அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய ஆசிரியை வசந்தா, அனைத்து ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார்'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...