ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாளில் முறைகேடு: மறைமுக குறியீடு,.. டிஆர்பி அதிர்ச்சி சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் பலர் தங்கள் விடைத்தாளில் மறைமுக குறியீடுகளை எழுதியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்காக தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வு ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் தமிழகத்தில் 1 லட்சத்து 62,314 பேர் எழுதினர். தற்போது முதல்தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மேற்கண்ட தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்களில் பலர் தங்கள் ஓஎம்ஆர் விடைத்தாளில் தங்களின் தவறான விடை குறியீடுகளை பதிவு செய்திருந்தவர்கள், சந்தேகத்துக்கு இடமான குறியீடுகளை விடைத்தாளில் எழுதி இருந்தவர்களின் விடைத்தாள்கள் கணினி மூலம் திருத்தப்படவில்லை. மேலும் அவர்கள் கேள்வித்தாளின் வரிசை எண்களை எழுதாமல் விட்டிருந்தனர்.
அவர்கள் விடைத்தாள்களும் திருத்தப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. சிலர் கேள்வித்தாள் வரிசை எண்களை எழுதியும், விடைக்கான குறிகளை எழுதாமல் விட்டு இருந்தனர். அவர்களின் விடைத்தாள்கள் திருத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. மொழிக்கான வாய்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களின் விடைத்தாளும் திருத்தப்படவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுத்த மொழியின் அடிப்படையில் திருத்தப்பட்டன. விருப்ப மொழியை குறிப்பிடாதவர்கள் விடைத்தாள்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதுபோல தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குளறுபடிகள் செய்தவர்களும் இருந்தனர். அவர்கள் விடைத்தாள்கள் தமிழ் மொழியாக கருதப்பட்டன. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையில் தற்போது முதல் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியான மதிப்பெண் சான்று 22ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களும், ரத்து செய்யப்பட்டவர்களின் பதிவு எண்களும் அடங்கிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் அனைவரும் அறிந்து ஒன்று. இந்த பரபரப்பு நீடித்து வரும் நிலையில், முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் பலர் முறைகேடுகள் செய்வதற்கு ஏதுவாக, விடைத்தாளில் மறைமுக குறியீடுகளை எழுதியுள்ளனர். மேலும், ஒவ்வொரு விடைத்தாளில் அந்த நபர் தங்களின் கேள்வித்தாளின் வரிசை எண்கள் மற்றும் கேள்வித்தாளின் குறியீடுகளையும் எழுத வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தும் அதை எழுதாமல் விட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் மீண்டும் முறைகேடு செய்ய சிலர் முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோல மறைமுக குடியீடுகளை விடைத்தாளில் எழுதியுள்ள நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...